×

கடலூர் மத்திய சிறையில் ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சி

திருவொற்றியூர்: கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி எண்ணூர் தனசேகர், அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகர் என்பவர், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் சிறை அலுவலர் மணிகண்டனுக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு எண்ணூர் தனசேகர், மணிகண்டன் குடும்பத்தினரை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சிதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக எண்ணூர் தனசேகரனின் தம்பி உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளிச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை கைதி தனசேகரன் தனது அறையில் ரத்த அழுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் எண்ணூர் தனசேகர் இதுபோல ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

The post கடலூர் மத்திய சிறையில் ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,central jail ,Ennoor Dhanasekhar ,Tiruvottiyur ,
× RELATED ஜெயிலர் மகனிடம் லேப்டாப் திருட்டு