×

இரட்டை ரோஜாவுடன் புதிய கட்சி ஜெயலலிதாவை உரிமை கொண்டாடும் அடுத்த வாரிசு: 39 தொகுதியிலும் தனித்து போட்டி என அட்ராசிட்டி

கொடைக்கானல்: ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்பவர் புதுக்கட்சி துவங்கியிருப்பதாகவும், எம்பி தேர்தலில் தனித்து போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை கூறியபடி வலம் வரும் ஜெ.ஜெயலட்சுமி நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். சோபன் பாபு எனது தந்தை. எனது தாயாரை பல காரணங்களுக்காக நான் சந்திக்கவில்லை. அவர் முதல்வராக இருந்தபோது இரு முறை சந்தித்துள்ளேன். மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை சந்தித்தேன். நடிகையாக இருந்தபோது, அவர் வசித்த வீட்டில் நான் வசித்து வருகிறேன். அங்கு அவர் எழுதிய டைரி உள்ளது. அவர் பயன்படுத்திய ஆடைகள் உள்ளிட்டவை என் வசம் உள்ளன. பல காரணங்களுக்காக நான் வெளிப்படையாக அவரது மகள் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா மகள் என்பதற்கான டிஎன்ஏ டெஸ்ட் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளேன். தற்போது புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளேன். அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்ற கழகம் என்பது எனது புதிய கட்சியின் பெயர். கட்சியின் சின்னம் இரட்டை ரோஜா. இரட்டை இலைக்கு பதிலாக, போட்டியாக இரட்டை ரோஜா சின்னம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காகத்தான் கொடைக்கானல் வந்தேன். எம்பி தேர்தலில் எனது கட்சி 39 தொகுதிகளிலும் போட்டியிடும். எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது கட்சியின் கொள்கையே எனது அம்மாவின் ஆசைதான். ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் உள்ளது. பலர் இதற்கு காரணமாகவும் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

The post இரட்டை ரோஜாவுடன் புதிய கட்சி ஜெயலலிதாவை உரிமை கொண்டாடும் அடுத்த வாரிசு: 39 தொகுதியிலும் தனித்து போட்டி என அட்ராசிட்டி appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Kodaikanal ,Jayalakshmi ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...