×

இந்தியா கூட்டணி கட்சியினர் சனாதனத்தை அழிக்க விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு

போபால்: இந்தியா கூட்டணி கட்சிகள் சனாதனத்தை அழித்து விடுவார்கள் என்று மபியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்துக்கு பிரதமர் மோடி நேற்றுவருகை புரிந்தார். பினாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து மாநிலத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு ஆலையில் ரூ.49,000 கோடி மதிப்பீட்டிலான பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் மாநிலத்தில் 10 தொழில்துறை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரதமர் மோடி இந்தியா கூட்டணி கட்சிகளை குறிவைத்து தாக்கி பேசினார். அதை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் நடந்த விஜய் சங்கநாத் பேரணியிலும் கலந்து கொண்டு பேசியதாவது:

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் நீங்கள் அதிகாரத்தில் இருந்து விலக்கி வைத்தவர்களும், தொடர்ந்து தேர்தலில் தோல்வியுற்றவர்களும் இப்போது உங்கள் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் குறிவைக்கும் அளவுக்கு உங்கள் மீது வெறுப்பில் நிரம்பியிருக்கிறார்கள். இவர்கள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த ‘கமாண்டியா’ (திமிர்பிடித்த) குழுவானது, சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வந்த கலாச்சாரத்தை உடைக்க நினைக்கும் இவர்கள் அதிகார பேராசை கொண்டுள்ளனர். சனாதன கலாச்சாரம் என்பது, பகவான் ராமர் ஷபரியை தனது தாய் என்று அழைத்து, பாதி உண்ட பேரியை (ஜூதே பெர்) சாப்பிட்டு மகிழ்வதுதான்.

பழமையான சனாதன கலாச்சாரம் ஒரு நபரின் கர்மாவின் (செயல்) அடிப்படையிலானது, பிறப்பு அடிப்படையிலானது அல்ல. சனாதன கலாச்சாரம் என்பது வனவாசிகளையும், நிஷாத் ராஜையும் தன் சகோதரனை விட பெரியதாக கருதுவது சனாதன கலாச்சாரம். படகு ஓட்டும் படகோட்டியை ராமர் அரவணைத்து செல்வது தான் சனாதன கலாச்சாரம். சனாதன கலாச்சாரம் என்பது பிறப்பிற்கு அல்ல, மனிதனின் செயல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. சனாதன தர்மம் எப்போதுமே நாட்டின் தலைவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி பல்லாயிரம் ஆண்டு கால கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க விரும்புகிறது. நாட்டு மக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியா கூட்டணி கட்சியினர் சனாதனத்தை அழிக்க விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Bhopal ,Modi ,Mabi ,Sanatana.… ,Sanatana ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி