×

நாட்டு மக்களை இந்தி ஒருங்கிணைக்கிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி மொழி ஒருங்கிணைக்கிறது என்றும் அது மற்ற மொழிகளுக்கு போட்டியில்லை என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி இந்தி தினமானது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தி திவாஸையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்தியா பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகின்றது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகின்றது. இது பல்வேறு இந்திய மொழிகளை கவுரவித்துள்ளது.

பேச்சுவழக்குகள், உலகளாவிய மொழிகள் மற்றும் அவற்றின் சொற்களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஏற்றுக்கொண்டது.சுதந்திரப்போராட்டத்தின் கடினமான நாட்களில் நாட்டை, நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் இந்தி மொழி முன்னோடியில்லாத பங்கை கொண்டுள்ளது. பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளை கொண்ட நாட்டில் இந்தி மொழியானது ஒற்றுமை உணர்வை தூண்டியது. சுதந்திரப்போராட்டத்திலும், சுதந்திரத்திற்கு பிறகும் இந்தி மொழியின் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு இந்தி அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தி மொழி ஒருபோதும் போட்டியிட்டதில்லை அல்லது வேறு எந்த மொழியுடனும் போட்டியிடப்போவதும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post நாட்டு மக்களை இந்தி ஒருங்கிணைக்கிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Amit Shah ,New Delhi ,Union ,India ,Interior Minister ,
× RELATED போலீஸ் காவலில் இருக்கும் பொருளாதார...