
புதுடெல்லி: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையிலும், தான் பாராட்டு பெறும் நிகழ்ச்சியை மோடியால் ஒத்தி வைக்க முடியாது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீரின் அனந்த்நாக்கில் உள்ள கரோலி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ கர்னல், மேஜர் மற்றும் போலீஸ் டிஎஸ்பி உயிரிழந்தனர். இந்நிலையிலும், பிரதமர் மோடி பாஜ தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஜி 20 வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தனது டிவிட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒருபுறம் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் சோகத்தில் இருப்பதும், மறுபுறம் இந்தியா தலைமையிலான ஜி 20 வெற்றிக்கு, பாஜ தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதும் இடம் பெற்றுள்ளது. அதன் கீழ் “நமது ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்த துயர செய்தி கிடைத்த போது, பாஜ தலைமை அலுவலகத்தில் பேரரசருக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் எது நடந்தாலும் பரவாயில்லை, தான் பாராட்டப்படும் நிகழ்ச்சியை மட்டும் ஒத்தி வைக்க முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.
The post காஷ்மீரில் ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில் பாராட்டு விழாதான் மோடிக்கு முக்கியம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.