
புதுடெல்லி: வழக்கு விசாரணைக்கு முன்தயாரிப்பு இல்லாமல் ஜூனியரை அனுப்பிய வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.2,000 அபராதம் விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்கு ஒன்று நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் தனது ஜூனியரை அனுப்பி இருந்தார். ஜூனியர் வழக்கறிஞர், முதன்மை வழக்கறிஞர் இல்லாததால் வழக்கை ஒத்தி வைக்கும்படி நீதிபதிகளிடம் கேட்டு கொண்டார்.இதனை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் செயல்படுவதற்கு சில உள்கட்டமைப்பு செலவுகள் செய்யப்படுகிறது. நீங்கள் வாதிட தொடங்கலாம் என்று கூறினர்.
அப்போது வழக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது. எந்த விவரங்களும் தன்னிடம் இல்லை என்று கூறினார்.இதனை கேட்ட நீதிபதிகள், அரசியலமைப்பின்படி வழக்கை விசாரிக்க அறிவுறுத்துகிறோம். வழக்கின் முதன்மை வழக்கறிஞர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பிறகு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரான முதன்மை வழக்கறிஞரிடம், வழக்கு குறித்த முன்தயாரிப்பு இல்லாமல் ஏன் ஜூனியரை அனுப்புனீர்கள் என்ற கேட்ட நீதிபதிகள் அவருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
The post முன்தயாரிப்பின்றி ஆஜரான ஜூனியர் முதன்மை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.2000 அபராதம் appeared first on Dinakaran.