×

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் 15 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெற்று டிசம்பரில் செயல்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறும் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டமானது ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்றப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் அமைக்கும் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் அமைக்கப்பட்டது. 2007ம் ஆண்டு ரூ.877.59 கோடியில் 2ம் கட்டமாக மயிலாப்பூர் முதல் வேளச்சேரி தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆதம்பாக்கம் பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றன.

பல்வேறு பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 15 ஆண்டுகளுக்கு பின் முடிவு நிலையை எட்டியுள்ளது. இந்த பணிகளானது கடந்த மார்ச் மாதத்தில் நிறைவடையும் ஜூன் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் பணிகளில் தற்போது முடிவடைந்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை உயர் அதிகாரி கூறுகையில் : சென்னையில் அடுத்தகட்ட போக்குவரத்து வளர்ச்சியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியமானதாக மாறி வருகிறது. அந்த வகையில் பரங்கிமலையில், மேம்பால மின்சார ரயில்பாதை இணைப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் 15 ஆண்டுகளாக பிரச்னையில் இருந்த வந்த பறக்கும் மின்சார ரயில் திட்டம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான ரூ.730 கோடியில் பணிகள் நடைபெற்றது.

ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி செலவிடப்பட்டது. இந்த ரயில் பாதையானது கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டமானது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்றப்பட்டு டிசம்பர் மாதம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் 15 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெற்று டிசம்பரில் செயல்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Chennai ,Parangimalai Flying Railway Railway Railway Railway Railway Railway Safety Commission ,Dinakaran ,
× RELATED சென்னை பள்ளிக்கரணையில் சாலையில்...