×

திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,50,001 வது ஏக்கர் அளவீடு செய்யும் பணி: அமைச்சர்சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை பாதுகாத்திடும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதோடு, நவீன தொழில்நுட்ப கருவிகளின் மூலம் அளவீடு செய்து எல்லைக் கற்கள் பதிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (14.09.2023) தருமபுரி மாவட்டம், கோபாலம்பட்டி, அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.93 ஏக்கர் நிலத்தினை அளவீடு செய்ததன் மூலம் 1,50,000 ஏக்கரை நிறைவு செய்து, 1,50,001-வது ஏக்கரை நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு நவீன தொழில்நுட்ப கருவியான ஞிநிறிஷி ரோவர் மூலம் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 08.09.2021 அன்று நில அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம், அருள்மிகு வியாக்ரபுரீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தினை அளவீடு செய்யும் போது 50,000 ஏக்கரை நிறைவு செய்தோம். அதனை தொடர்ந்து பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் நிலத்தினை அளவீடு செய்து 1,00,000 ஏக்கரை எட்டினோம். இன்றைய தினம் தர்மபுரி மாவட்டம், கோபாலம்பட்டி கிராமம், அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2.93 ஏக்கர் நிலத்தினை அளவீடு செய்வதன் வாயிலாக 1,50,000 ஏக்கரை நிறைவு செய்து, 1,50,001-வது ஏக்கரை தொடங்கி வைத்து எல்லை கற்களை நட்டு பாதுகாத்துள்ளோம்.

அதனைத் தொடர்ந்து, அதியமான்கோட்டை, அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். அங்கு பக்தர்கள் தெரிவித்த கோரிக்கைகளான திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறுகின்ற காலபைரவர் வழிபாட்டின் போது விளக்கு ஏற்றுகின்ற வகையில் விளக்கேற்றும் இடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பின்படி, தருமபுரி, கோட்டக்கோயில் அருள்மிகு மல்லிகார்ஜூனஸ்வரர் மற்றும் பரவாசுதேவர் திருக்கோயில் திருப்பணியானது மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டெண்டர் உறுதி செய்யப்பட்டபின் விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இன்றைய தினம் ரூ.14.5 இலட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தேர் பணிகளை நிறைவு செய்து, வருகின்ற தை மாதத் திருவிழாவின்போது வீதிவுலா வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, இந்து சமய அறநிலையத்துறை தனி அலுவலர் (ஆலய நிலங்கள்) ஜி.விஜயா, மண்டல இணை ஆணையர் வே.சபர்மதி, தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பெ.கௌதமன், தருமபுரி உதவி ஆணையர் மா. உதயகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் 1,50,001 வது ஏக்கர் அளவீடு செய்யும் பணி: அமைச்சர்சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Hindu Religious Endowments Department ,
× RELATED சென்னை கொளத்தூரில் மழைக்கால வெள்ளத்...