×

சென்னை விமானநிலையத்தில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: கடத்தல் ஆசாமி கைது

மீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலமாக இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 15 மலைப்பாம்பு குட்டிகள், ஒரு ஆப்பிரிக்க அணில் என மொத்தம் 16 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்த ஆசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. அவ்விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்த சென்னையை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க சுற்றுலா பயணிமீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி, கூடைக்குள் என்ன இருக்கிறது என விசாரித்தனர்.

அதற்கு அந்நபர் விளையாட்டு பொம்மைகள் என முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்து அந்நபர் கொண்டு வந்த 2 பிளாஸ்டிக் கூடைகளைத் திறந்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதற்குள், உயிருடன் 15 மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அணில் உயிருடம் சுற்றிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிகாரிகள் அலறி சத்தம் போட்டனர். எனினும் அந்நபர், இவையெல்லாம் ரப்பர் பாம்புகள் போல், விஷமற்ற விளையாட்டு பாம்புகள்தான் எனக் கூறியபடி ஒரு பாம்பு குட்டியை உள்ளங்கையில் வைத்து காட்டினார். இதில் சுங்கத்துறை அதிகாரிகள் சுதாரித்து, அப்பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர். அதோடு 16 அரிய வகை உயிரினங்கள் இருந்த 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகளையும் தனியே எடுத்து வைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பெசன்ட்நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமானநிலையத்துக்கு விரைந்து வந்தனர். அந்த 2 கூடைகளை போலீசார் சோதனை செய்தபோது, அதற்குள் விஷமற்ற பால்பைதான் எனும் ஆபத்தான 15 மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகளவில் காணப்படும் அரிய வகை அணில் ஒன்று உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்னர் 16 அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணியிடம் விசாரித்தனர். விசாரணையில், தாய்லாந்து நாட்டில் இத்தகைய விஷமற்ற பாம்பு குட்டிகள் மற்றும் அரிய வகை விலங்குகள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இவற்றை சென்னைக்கு கடத்தி வந்து, சில வாரங்கள் பெரிதாக வளர்த்து, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவோம். இவற்றை வாங்குவதற்கு ஒருசிலர் உள்ளனர். ஒருசில பணக்காரர்களும் இத்தகைய அரிய வகை விலங்குகளை வீடுகளில் வைத்து வளர்க்கின்றனர் என்று அந்நபர் கூறியதாகத் தெரியவந்தது. எனினும், இந்த 16 அரிய வகை விலங்குகளை எடுத்து வந்த சென்னை பயணியிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை. இதனால் அந்த வெளிநாட்டு அரிய வகை விலங்குகள் பலருக்கு நோய்தொற்று கிருமிகள் பரவி, நம்நாட்டு உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு உயிராபத்து ஏற்படலாம்.

இதனால் அந்த அரிய வகை விலங்குகளை மீண்டும் தாய்லாந்து திருப்பி அனுப்பலாம் என சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிம் ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தாய்லாந்திலிருந்து விமானத்தில் 16 அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த சென்னை நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், சென்னை விமானநிலையத்தில் பிடிபட்ட 15 மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அணில் என மொத்தம் 16 அரிய வகை விலங்குகளை நாளை அதிகாலை தாய்லாந்து செல்லும் பயணிகள் விமானத்தில் அனுப்பி வைக்க சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவற்றை அனுப்பும் விமான செலவு அனைத்தையும் பிடிபட்ட சென்னை கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்க சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The post சென்னை விமானநிலையத்தில் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்: கடத்தல் ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Thailand ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...