×

திருநீற்றை உடலில் தரிப்பதால் என்ன பயன்?

திருநீற்றை உடலில் தரிப்பதால் என்ன பயன்?
– சுமலதா, வண்டலூர்.

வாதத்தால் உண்டாகும் 81 நோய்களையும், பித்தத்தால் உண்டாகும் 64 நோய்களையும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களையும் திருநீறு தீர்க்கும் என மருத்துவக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலையற்ற இந்த வாழ்வில் நாமும் ஒரு நாள் சாம்பலாகத்தான் போகிறோம் என்பதையும் திருநீறு உணர்த்துகிறது.

பிரதோஷத்தின் முக்கியத்துவம் என்ன?
– ராதிகா, நந்திவரம்.

அமுதம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது பாற்கடலிலிருந்து கற்பக மரம், காமதேனு, தன்வந்திரி போன்றவர்கள் தோன்றின. இறுதியில் ஆலகால விஷம் தோன்றியது. உலகத்தை அழித்துவிடக்கூடிய அந்தக் கடுமையான விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். விஷத்தின் கடுமை காரணமாக, அவர் சிறிது நேரம் மயக்கமடைந்தார். அந்த நேரத்தில் தேவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானை வழிபட்டனர். அவ்விதம் அவர்கள் வழிபட்ட நேரமே பிறகு ‘பிரதோஷம்’ என்று சிவாலயங்களில், சிவபூஜை செய்யும் நேரமாக அமைந்தது.

பிரகலாதனின் வாழ்க்கை உலகிற்கு வழங்கிய செய்தி என்ன?
– ஸ்ரீஹரி, அகோபிலம்.

பாலைவனத்தில் சந்தனமரம் தோன்றியதுபோல், அசுரர் கூட்டத்தில் பிரகலாதன் தோன்றினான். இறைத்தத்துவம் அண்ட சராசரத்திலுள்ள ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கிறது. இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்பதை பிரகலாதனின் சரிதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பக்தர்களில் முதன்மையானவராக வைணவம், பிரகலாதனைக் குறிப்பிடுகிறது.

கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்?
– சுந்தர், வாளாடி.

‘பகம்’ என்றால் ஆறு குணங்கள். அதி உன்னதமான ஆறு குணங்களை உடையவன், பகவான். அந்த ஆறு குணங்கள் எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பலம், எல்லையற்ற ஐஸ்வரியம், எல்லையற்ற வீரியம், எல்லையற்ற ஆதாரசக்தி, எல்லையற்ற தேஜஸ்.

நிறைவேறாத ஆசையால்தான் ஏக்கம் வளருகிறது. ஆனால், ஆசை நிறைவேறிவிட்டால் அது குறையும்தானே?
– எம்.எஸ்.விஜய், சென்னை.

ஆசை அடங்காது. ஒருமுறை அனுபவித்துவிட்டால் அதைத் தொடர்ந்து அனுபவிக்கச் சொல்லும் விசித்திர நோய் அது. ஒரு சிறு குழந்தை தன் கையால் ஒரு மாம்பழத்தை பற்றிக்கொள்ளும். இரண்டு கைகளாலும் இரண்டு மாம்பழங்களை ஏந்திக்கொள்ள முடியும். மூன்றாவதாகவும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், கையிலிருக்கும் இரண்டு பழங்களும் கீழே விழ நேரிடும். ஆகவே, ஆசைக்கு எல்லை வகுத்துக்கொள்வது நல்லது. ‘போதும்’ என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சீனப்பழமொழி இது: ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே என்று நினைக்கிறாயா, அப்போது சாப்பிடுவதை நிறுத்திவிடு. உன் உடல்நலத்தில் எந்தக் குறையும் ஏற்படாதவாறு காக்கும் தந்திரம் இதுதான்’.

வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?
– தயா, பூம்புகார்.

மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை அதிக அளவில் ஈர்க்கும் சக்தி மாவிலைக்கு உண்டு. மேலும், தொற்று நோய்க் கிருமிகளையும் ஈர்க்கும் சக்தி அதற்கு உள்ளது. எனவேதான் மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவிலைத் தோரணம் கட்டுகின்றனர்.

The post திருநீற்றை உடலில் தரிப்பதால் என்ன பயன்? appeared first on Dinakaran.

Tags :
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்