×

காந்தி நினைவு அருங்காட்சியகம் -மதுரை

ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திரத்துக்கு போராடிய எண்ணற்ற தியாகிகளின் வழிகாட்டியாக தேசத் தந்தையாக விளங்கிய மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். இதன்பின் இந்திய மக்களின் ஆதரவோடும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அகில இந்திய காந்தி ஸ்மாரக் நிதி என்று சொல்லப்படும் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் நிதி உதவியாலும் காந்தி நினைவு அருங்காட்சியம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு அருங்காட்சியகம் ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ள இடம் ஒரு வரலாற்று கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்தது. தமுக்கம் அரண்மனை என்று அழைக்கப்படும் இது கி.பி 1670ல் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இருப்பினும், பின்னர் இந்த அரண்மனை மற்ற வம்சங்களின் ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. மேலும் காலனித்துவ ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் மதுரை மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இது இருந்தது. 1955ஆம் ஆண்டு, இந்த அரண்மனை அகில இந்திய காந்தி ஸ்மாரக் நிதிக்கு தமிழ்நாடு மாநில அரசால் பரிசாக வழங்கப்பட்டது. மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டது. இந்த அருங்காட்சியகம் காந்தி ஸ்மாரக் நிதியால் கட்டப்பட்டதோடு அவர்களால் பராமரிக்கப்படுகிறது. இது 1959ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரண்மனை கட்டிடக்கலை நுணுக்கத்தோடு பார்வையாளர்களை வசீகரிக்கும் விதமாக உள்ளது.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் பிரதான கட்டடத்தின் முன், ஒரு குடிசையை நீங்கள் காணலாம். இது பிரதான கட்டடத்திற்கு சற்று தெற்கே அமைந்துள்ளது. சேவாகிராமில் உள்ள மகாத்மா காந்தியின் அசல் குடிசையின் பிரதியாக இது உருவாக்கப்பட்டது.கட்டடத்தின் தரை தளத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்களின் ஒரு பகுதி உள்ளது. அங்கு நீங்கள் மகாத்மா காந்தியால் புத்துயிர் பெற்ற பல்வேறு கிராமத் தொழில்கள் குறித்த மாதிரிகளை காணலாம். கட்டடத்தின் வடக்குப் பகுதியில், 20,000க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு நூலகம் உள்ளது. மகாத்மா காந்தியின் சுமார் 2,70,000 கடிதங்கள் மற்றும் மைக்ரோஃபிலிம்களின் பல ரீல்களை இங்கு காணலாம்.திறந்தவெளி தியேட்டரும் உள்ளது. இது அருங்காட்சியகத்தின் பிரதான கட்டிடத்தின் தெற்கே அமைந்துள்ளது. இந்த பரந்த திறந்தவெளி தியேட்டர் சுமார் 8000 பேர் தங்கும் திறன் கொண்டது. இந்த திரையரங்கில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படுகின்றன. கட்டடத்தின் வடக்குப் பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவு உள்ளது. அதில் ஒரு நூலகமும் உள்ளது.

அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய சுமார் 100 கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அவர் கொல்லப்பட்ட நாளில் அவர் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த துண்டும் அடங்கும். அசல் துணியின் பிரதி என்று சொல்லப்படும் இந்த துணி, கண்ணாடிப் பெட்டியில் கவனமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள மற்ற நினைவுச்சின்னங்களில் மகாத்மா காந்தி அடால்ஃப் ஹிட்லருக்கு எழுதிய கடிதம் உள்ளது. சிறந்த கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதிக்கு மகாத்மா காந்தி எழுதிய வாழ்த்துக் கடிதத்துடன் தேவகோட்டையைச் சேர்ந்த நாராயணன் சத்சங்குக்கு அவர் தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதமும் உள்ளது.தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு கோடி ஒதுக்கி பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காக அறிவித்துள்ளதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

The post காந்தி நினைவு அருங்காட்சியகம் -மதுரை appeared first on Dinakaran.

Tags : Gandhi Memorial Museum ,Madurai ,Mahatma Gandhi ,
× RELATED மகாத்மா காந்தி மகாபுருஷர் நரேந்திர...