×

133 தென்னை ஓலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவன் சாதனை

ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வருகிறார் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவை சேர்ந்த முகமது இஷாக். இவரது மனைவி ஷகீலா பானு. இவர்களின் மூத்த மகன் வஜாஹத் (15) என்பவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாணவர்களுக்கான திறன் வளர்ச்சிப் போட்டியில் கலந்துகொண்டு 2 சாதனைகளைப் படைத்துள்ளார். இதில் முதல் சாதனையாக 6 வகையிலான ரூபிக்ஸ் க்யூப் இணைத்துக்கொண்டே 160 திருக்குறளை 7 நிமிடம், 41 நொடியில் உச்சரித்துள்ளார். மற்றொரு சாதனையாக 1330 திருக்குறளை 11 மணி 36 நிமிடத்தில் 133 தென்னை ஓலையில் பேனா மூலம் தொடர்ந்து எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார். இவரது திறமையை கவுரவிக்கும் விதமாக சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பில், உலக சாதனையாளருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் கொடுத்து அவரின் வாழ்த்துகளோடு மாணவர் வஜாஹத் சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து மாணவன் வஜாஹத் கூறும்போது, ‘‘என் பெயர் வஜாஹத் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் பாரதியார் மெட்ரிக் ஹையர் செக்கண்டரி பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறேன். சமீபத்தில் 2 உலக சாதனை படைத்துள்ளேன். இதற்கு என்னுடைய பெற்றோர்களின் ஆதரவே காரணம். க்யூப் மீதும், திருக்குறள் மீதும் இருந்த ஆர்வமே இந்த சாதனை படைக்க காரணமாக இருந்தது. இதன் மூலம் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்திய பெற்றோர், ஆசிரியர், கலாம்ஸ் வேல்டு ரெக்காட்ஸின் கைடு, நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது லட்சியம்’’ என்றார்.

The post 133 தென்னை ஓலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Vallancheri Raghuman Street, Chengalpattu District ,
× RELATED அரசு கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு