×

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ் காட்டம்

சென்னை: தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், சிங்களக் கடற்படை அத்துமீறி நுழைந்து கைது செய்திருக்கிறது. சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எப்போதெல்லாம் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வாழ்வாதாரம் பறிக்கப்படுவதும் தொடர்கதையாக மாறி வருகிறது.

சிங்களப் படையினரின் தொடர் அத்துமீறல்கள் காரணமாக தமிழகத்தில் ஏராளமான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் தான் அவர்கள் கைது செய்யப்படுவதாக இலங்கை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கவே இலங்கை அரசு திட்டமிட்டு செயல்படுவதாக தோன்றுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் தமிழக மீனவர்கள் மீது மூன்று முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடற்கொள்ளையர்களின் தாக்குதல் இப்போது குறைந்துள்ள நிலையில், கைது நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. எனவே, இவை இரண்டுமே தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதற்காக இலங்கை அரசு திட்டமிட்டு செய்யும் செயலாகவே தெரிகிறது.

தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்களால் கொள்ளைகளுக்கு ஆளாக்கப்படுவதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இதை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அரசை கடுமையாக எச்சரிப்பதன் மூலமாகவோ, அல்லது இரு தரப்பு பேச்சுகளின் மூலமாகவோ வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Fishermen Arrest ,Ramadas Gatham ,Chennai ,Tamil Nadu ,Bamaka ,Tamil ,Nadu Fishermen ,Sinhala Army ,Ramadas Gadam ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...