×

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!!

சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஸ்வ இந்து அமைப்பின் முன்னாள் மாநில தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் சனாதனத்தை ஆதரித்து பேசினார். அப்படி பேசும் போது அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது.

மேலும் மதம் மற்றும் சாதி ரீதியாக வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய தலைவர்களையும், தமிழ் அறிஞர்களையும் இழிவாக பேசிய அவரை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி இருந்தனர். அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதாக மணியன் மீது விசிக முன்னாள் நிர்வாகி இரா.செல்வம் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 8 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, இன்று அதிகாலையில் தியாகராய நகர் ராஜம்மாள் தெருவில் உள்ள இல்லத்தில் வைத்து ஆர்.பி.வி.எஸ். மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக மணியனை ஆஜர்படுத்தினர். அப்போது, வயது மூப்பு, சிறுநீரக பிரச்னை ஆகிய காரணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என ஆர்.பி.வி.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. வி.எச்.பி. முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை செப்.27 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

The post அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வி.எச்.பி. முன்னாள் நிர்வாகி மணியனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!! appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Thiruvalluvar ,V.S. H. GP ,Manion ,Chennai ,Tiruvalluvar ,V.S. ,GP ,V.A. ,H. GP ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா