×

தேர்தல் ஆணையர் நியமன மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு.. கூட்டத் தொடரின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய அரசு மறைப்பதாக சாடல்!!

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து 5 நாள் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் எதற்காக இந்த கூட்டத்தொடர் என்பது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. நேற்று இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் 5 நாள் கூட்டத் தொடரின் முதல் நாளில் 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தின் பயணம் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தொடரின் போது, ​​4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. முக்கியமாக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் மூவர் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, தலைமை நீதிபதிக்கு பதில், பிரதமர் பரிந்துரைக்கும் அமைச்சர் அக்குழுவில் இடம்பெறுவார் என்ற வகையில், மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதனை I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், கூட்டத் தொடரின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய பாஜக அரசு மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். நவம்பரில் நடக்கும் குளிர்கால கூட்டத் தொடர் வரை அவகாசம் உள்ளதால், அதிரடி சட்டங்களை மோடி அரசு கொண்டு வரலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே மணிப்பூர் வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்திய சோனியா காந்தியின் கடிதத்தை அரசு கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மவுனம் காப்பதாக காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கூறியுள்ளார்.

The post தேர்தல் ஆணையர் நியமன மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு.. கூட்டத் தொடரின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய அரசு மறைப்பதாக சாடல்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Bill Sadal ,Union ,New Delhi ,Parliament ,Congress' ,Sadal ,of the ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.....