×

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்..!!

சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- திருவெற்றியூர், கடற்கரை-வேளச்சேரி என புறநகர் ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் பீக் நேரங்களில் ரயில்கள் சில நிமிடங்கள் தாமதம் ஆனாலே ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதும். அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, பெருங்குடி, திருவான்மியூர், கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மெரினா கடற்கரைக்கு செல்ல பயணிகள் அதிகம் பயன்படுத்தும் திருவல்லிக்கேணி ரயில் நிலையம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்கிறது. இந்த நிலையில், சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையகப்படுத்துவது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது. பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம்போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டிருக்கிறது. மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் இதில் அடங்கும். ரயில் நிலையங்களில் 1 முதல் 4 தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது உள்ளது; 20,44,400 ச.மீ. அளவில் இடங்கள் உள்ளது. வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Chennai ,Tamil Nadu Government ,Chennai Coast ,Velacheri ,Tamil ,
× RELATED சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட் புறநகர் ரயில் தி.மலை வரை நீட்டிப்பு..!!