×

விழுப்புரம் அருகே பயணிகள் நிழற்குடை கட்ட எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

விழுப்புரம், செப். 14: பயணிகள் நிழற்குடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தில் இரு தரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டு வருவாய்த்துறையினர், காவல்துறையினர் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ராம்பாக்கம் கிராமத்தில் வளவனூர் – பட்டாம்பாக்கம் செல்லும் சாலையில் திரவுபதி அம்மன் கோயில் அருகே பயணிகள் நிழற்குடை கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் கோயில் அருகே கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி அருகே உள்ள பொது இடத்தில் கட்டுமாறு கூறியுள்ளனர். மற்றொரு தரப்பினர் பயணிகள் நிழற்குடை கோயில் அருகில்தான் கட்ட வேண்டும்.

அங்கு தான் பொதுவாக பேருந்து நின்று செல்லும் என்று தெரிவித்தனர். இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் மீண்டும் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி கோயில் அருகில் நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பைச் சேர்ந்த கார்த்திகேயன்(26) என்ற வாலிபர் நேற்று அங்குள்ள செல்போன் கோபுரத்தின் மீது 30 அடி உயரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் வளவனூர் – பட்டம்பாக்கம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வளவனூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தி சுமூகதீர்வு ஏற்படும் வரை பணிகள் நடைபெறாது என்று உறுதி அளித்ததால் மறியல், தற்கொலை மிரட்டல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரம் அருகே பயணிகள் நிழற்குடை கட்ட எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED ‘சான்றிதழ் வேணும்னா என் கூட சந்தோஷமா...