×

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேற்றம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மெய்யூர் தரைப்பாலம் மீண்டும் துண்டிப்பு: 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கடந்த சில நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியான கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள மெய்யூர் தரைப்பாலம் துண்டித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.        இந்நிலையில் இராஜபுாளையம், மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு,வெங்கல், மாலந்தூர், எரையூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 20 – க்கும் மேற்பட்ட கிராமங்கள் 15 கிலோ மீட்டர் சுற்றி திருவள்ளூருக்கு வரும்  நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தற்காலிகமாக தரைப்பாலத்தில் சீர் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும்,  2 நாட்களில் சாலைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால் அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் காலை முதல் 2 ஆயிரம் கன அடி, 3 ஆயிரம் கன அடி, 4 ஆயிரம் கன அடி என தண்ணீர் திறந்து விடுவது தொடர்ந்து உயர்த்தி திறக்கப்பட்டு வருகிறது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு சேதமடைந்த மெய்யூர் தரைப்பாலம் மீண்டும் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மெய்யூர் சுற்றுவட்டார 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எரையூர், பீமன்தோப்பு, கொரக்கத்தண்டலம், ஆத்தூர்,  பண்டிக்காவனூர், மடியூர், சீமாவரம், மணலி,  மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் இரு புறமும் வசிக்கும் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளார்….

The post பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து உபரிநீர் வெளியேற்றம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மெய்யூர் தரைப்பாலம் மீண்டும் துண்டிப்பு: 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Bundi Reservoir ,Meiyur ,Kosasthalai river ,Thiruvallur ,Poondi Satyamurthy Sagar Reservoir ,Chennai ,Dinakaran ,
× RELATED கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி