×

மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் தமிழ்நாடு – கேரள எல்லையில் 24 மணி நேரமும் தீவிர சோதனை: 9 மாவட்டங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியை தொடர்ந்து தமிழ்நாடு – கேரள பகுதி சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தமிழக பொதுச்சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வாளையார், மீனாட்சி புரம், ஆனைகட்டி, நடுப்புனி, கோபாலபுரம், வேலந்தாவளம் உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கேரளாவில் இருந்து வாளையார் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாகனத்தில் வரும் நபர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். கோழிகோட்டில் இருந்து வருவோரை தனியாக கண்டறிந்து விபரங்கள் சேகரித்து வருகின்றனர். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாளையார் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, 12 மொபைல் யூனிட் சேர்ந்தவர்கள் எல்லையோரம் உள்ள கிராம பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என கண்டறிந்து வருகின்றனர். இதேபோல தென்காசி மாவட்டம் புளியறையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் இருவர் என 3 பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முகாமை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல், குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, கோழிவிளை, காக்கவிளை, பளுகல் மற்றும் நெட்டா ஆகிய 5 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறை மூலம் நோய் அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* முக கவசம் அணிய உத்தரவு
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நிபா வைரஸ் தொற்று குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கலெக்டர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post மீண்டும் பரவும் ‘நிபா’ வைரஸ் தமிழ்நாடு – கேரள எல்லையில் 24 மணி நேரமும் தீவிர சோதனை: 9 மாவட்டங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala border ,Chennai ,Tamil Nadu-Kerala Region ,Kerala ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...