×

ஒன்றிய சட்ட அமைச்சர் மெக்வால் ஊழலில் நம்பர் 1: குற்றம் சாட்டிய பா.ஜ எம்எல்ஏ சஸ்பெண்ட்

ஜெய்ப்பூர்; ஒன்றிய சட்ட அமைச்சர் மெக்வால் ஊழலில் நம்பர் 1 என்று குற்றம் சாட்டிய பா.ஜ எம்எல்ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய சட்ட அமைச்சராக இருப்பவர் அர்ஜூன் ராம் மெக்வால். இவரது சொந்த மாநிலம் ராஜஸ்தான். அங்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மீது அவரது கட்சியான பா.ஜவை சேர்ந்த எம்எல்ஏ கைலாஷ் மெக்வால் பரபரப்பு ஊழல் புகார் கூறியுள்ளார். ஷாபுரா தொகுதி எம்எல்ஏவான கைலாஷ் மெக்வால் கூறும்போது,’ சட்ட அமைச்சர் மெக்வால் ஊழலில் நம்பர் 1. வெறும் ஜீரோவான அவர் இப்போது ஹீரோ ஆகிவிட்டார்.

அவர் மேல் ஏராளமான வழக்குகள் உள்ளன. எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதுபற்றி பிரதமர் மோடிக்கு நான்கடிதம் எழுதி உள்ளேன். பிரதமர் நீக்கவில்லை என்றால் அவரது பதவியை நீதிமன்றம் பறிக்கும். பிரதமர் நல்ல நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். 2014ம் ஆண்டு முதல் அர்ஜூன் ராம் மெக்வால் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவரது எம்பி பதவியை பறிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் எழுதுவேன் ’ என்று தெரிவித்தார். அவரது பேச்சு ராஜஸ்தான் அரசியலில் புயலை கிளப்பியது. இதையடுத்து 89 வயதான கட்சி எம்எல்ஏ கைலாஷ் மெக்வால் மீது பா.ஜ அதிரடியாக நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ஒன்றிய சட்ட அமைச்சர் மெக்வால் ஊழலில் நம்பர் 1: குற்றம் சாட்டிய பா.ஜ எம்எல்ஏ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Union Law Minister ,Meghwal ,BJP ,Jaipur ,BJP MLA ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...