×

நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி முறைகேடு கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் அகமது புகாரியின் ஜாமீன் ரத்து: அமலாக்கத்துறை மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து சுமார் 564 கோடி ரூபாய் அளவுக்கு அரசை ஏமாற்றியதாக, கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, தேசிய அனல்மின் கழகம் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 564 கோடி ரூபாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோஸ்டல் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அகமது ஏ.ஆர். புகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 16ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, உரிய காரணங்களை தெரிவிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் புஹாரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. தனி மனித சுதந்திரம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்றாலும், அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. தனி நபரின் சுதந்திரத்துக்காக நாட்டின் நலனை புறக்கணிக்க முடியாது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கினால் இதே போன்ற தவறை மீண்டும் அவர் செய்வதற்கான வாய்ப்புள்ளது. அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்று உத்தரவில் கூறியுள்ளார்.

The post நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி முறைகேடு கோஸ்டல் எனர்ஜி இயக்குநர் அகமது புகாரியின் ஜாமீன் ரத்து: அமலாக்கத்துறை மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coastal Energy ,Ahmed Bukhari ,Madras High Court ,Enforcement Department ,Chennai ,Indonesia ,Dinakaran ,
× RELATED கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது...