×

என்எல்சி நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் சந்தை மதிப்பிற்கு இணையாக பங்குகளை தர கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் சந்தை மதிப்பிற்கு இணையாக என்.எல்.சி. நிறுவன பங்குகளை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. 3ம் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் 25 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் .

அவரது மனுவில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு குறைந்தபட்ச இழப்பீட்டை கொடுத்துவிட்டு, நிலத்தின் சந்தை மதிப்பிற்கு இணையாக என்.எல்.சி. பங்குகளை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அருகிலேயே தங்கள் கிராமங்களை மறு உருவாக்கம் செய்துதர வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் மனுவை பரிசீலிக்குமாறு என்எல்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. நிலத்தை கொடுத்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தால் பரிசீலித்திருப்போம் எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

The post என்எல்சி நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் சந்தை மதிப்பிற்கு இணையாக பங்குகளை தர கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : NLC ,Chennai ,NN ,Dinakaran ,
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...