×

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் கட்டணத்தை குறைக்க திட்டம்: அதிகாரிகள் தகவல்

 

சென்னை: தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், மின் தூக்கி, மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய, காமன் சர்வீஸ் எனப்படும் பொது சேவை மின் இணைப்பு இருந்தது. இதற்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய கட்டண சலுகை கிடைத்தது. 2022 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது. அதில் முதல்முறையாக, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு, மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, ஒரு யூனிட், 8 ரூபாயும், மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, ரூ.100ம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூக கூடம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

கடந்த ஜூலை முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதில் மீண்டும் பொது சேவை பிரிவுக்கான ஒரு யூனிட் கட்டணம், ரூ.8.15ஆகவும், நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, ரூ.102ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால், குறைந்த வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, கட்டணத்தை குறைக்குமாறு, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, 10க்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பொது சேவை மின் கட்டணத்திற்கு பதில், வீட்டு பிரிவிலேயே மின் கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக 10க்கும் குறைவான வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையே பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக நிர்ணயிக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு கூறினர்.

The post அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் கட்டணத்தை குறைக்க திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...