
அவனியாபுரம்: ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி இல்லை பாஜ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கையும் எதேச்சதிகாரத்தையும் முறியடிக்கும் வண்ணம் இந்தியா எனும் கூட்டணியை ஏற்படுத்தி உள்ளோம். ஒன்றிய அரசு பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று முரட்டு பிடிவாதமும், மூர்க்கமுமாக செயல்படுவதால்தான் நீட் தேர்வு ரத்து செயல்படுத்த முடியவில்லை. பாரத் என பெயர் மாற்றுவது போன்ற அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை. ஜாதிய பாகுபாடுகளை உருவாக்கி தமிழகம் மற்றும் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜ முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது.
திமுக அரசு சாதிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறு. திமுக அரசு அன்றைய கால கட்டத்தில் உயர் நீதிமன்ற நீதிபதியாக, ஒடுக்கப்பட்டவரை நியமித்தது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஒன்றிய அரசு மிகப்பெரிய ஊழல் புரிந்துள்ளது. ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்று பாஜவை கூற முடியாத நிலை உள்ளது. நான் மேடையில் பேசி 3 வருடம் ஆகிறது. உடல்நிலை காரணமாக பேசவில்லை. சிங்க கர்ஜனை இந்த மாநாட்டில் கேட்குமா என்று கேட்கிறார்கள். புலி பதுங்குவது பாயத்தான். இவ்வாறு தெரிவித்தார்.
The post ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி இல்லை பாஜ: வைகோ காட்டம் appeared first on Dinakaran.