×

ஊக்கமருந்து சர்ச்சை: சிமோனாவுக்கு 4 ஆண்டு தடை

துபாய்: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (31 வயது, ருமேனியா), சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க 4ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2017, 2018ல் முதலிடம் வகித்த ஹாலெப் 2018 பிரெஞ்ச் ஓபன், 2019 விம்பிள்டன் தொடர்களில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அடிக்கடி ஏற்பட்ட காயங்களால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டதுடன், சுவாசப் பிரச்னை காரணமாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

2022 யுஎஸ் ஓபனில் முதல் சுற்றுடன் தோற்று வெளியேறினார். அந்த ஆட்டத்தில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சில நாட்கள் கழித்து குற்றச்சாட்டு எழுந்தது. பரிசோதனையில் ரோக்சாடுஸ்டாட் என்ற மருந்து அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் கலந்திருந்தது உறுதியானது. அது ரத்த சோகை நோய் உள்ளவர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து கடந்த அக்டோபரில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை விசாரித்து வந்த சர்வதேச டென்னிஸ் முகமை, ‘சிமோனா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது’ என அறிவித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து சிமோனா தரப்பில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

The post ஊக்கமருந்து சர்ச்சை: சிமோனாவுக்கு 4 ஆண்டு தடை appeared first on Dinakaran.

Tags : Simona ,Dubai ,Simona Halep ,Romania ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...