×

2004ல் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு; பாஜவின் ‘பாரத நாடகம்’ அம்பலம்: இந்தியா கூட்டணிக்கு அஞ்சி தேர்தலுக்கான நிலைப்பாடு எடுத்துள்ளதாக விமர்சனம்

மும்பை: பாரத நாடு என பெயர் மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜ அரசு, கடந்த 2004ம் ஆண்டு இந்தப் பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை எதிர்த்து வெளி நடப்பு செய்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதன் விளைவாக, 26 கட்சிகள் கொண்ட பிரம்மாண்ட கூட்டணி உருவானது. முதலில் பாட்னாவில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், பெங்களூருவில் கூடியது.

அப்போது இந்தக் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் 3வது கூட்டம் கடந்த 31 மற்றும் 1ம் தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் கூட்டணி உடைந்து எப்படியும் வலுவிழந்து விடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்றிய பாஜ அரசுக்கு, தொடர்ந்து மூன்றாவதாக நடந்த கூட்டம் பெரும் அதிர்ச்சி அளித்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே 26 கட்சிகள் இருந்த இந்தியா கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் இணைந்து 28 கட்சிகள் கொண்ட கூட்டணியாக அதிக வலுப்பெற்றது.

இது கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ‘இந்தியா’ என்ற கூட்டணியின் பெயரை பாரதிய ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க டெல்லியில் ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் ‘பாரத குடியரசுத் தலைவர்’ என திரவுபதி முர்மு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்தோனேஷியாவில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டு அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடி ‘பாரத பிரதமர்’ என குறிப்பிடப்பட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளதால் இந்தப் பெயரைக் கண்டு ஒன்றிய பாஜ அரசு அஞ்சி நடுங்குகிறது எனவும் இதனாலேயே பாரதம் என்று பெயர் மாற்றம் செய்ய துடிக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டும் பாரதிய ஜனதா கட்சி, முலாயம் சிங் யாதவ் இதே தீர்மானத்தை கொண்டு வந்தபோது எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உத்தரபிரதேசத்தில் நடந்த போது, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி இந்தத் தீர்மானத்தை உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கொண்டு வந்து, அப்போதைய முதல்வர் முலாயம் சிங் யாதவ் பேசியதாவது: ‘இந்தியா என்கின்ற பாரதம்’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘பாரத் என்கின்ற இந்தியா’ என்று நான் முன்மொழிகிறேன். ஆனால், இதை ஏற்க அவர்கள் (பாஜ) தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. மாநில அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் (முகமது அசம் கான்) இது தொடர்பான தீர்மானத்தை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மாநில சட்டமன்றம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

அப்படிச் செய்வதில் எங்கே தடை இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் ‘பாரத் என்கின்ற இந்தியா’ என மாற்றம் செய்ய முன்மொழிகிறேன். இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்க நான் உங்கள் அனுமதியைக் கோருகிறேன். இந்தத் தீர்மானத்துக்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு முலாயம் சிங் யாதவ் பேசினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டுமின்றி, சமாஜ்வாடி கட்சி தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்ய உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தீர்மானத்தை எதிர்த்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜ வெளிநடப்பு செய்துள்ளது.

தற்போது இந்தியாவை பாரத் என மாற்றத் துடிக்கும் பாஜ, முன்பு இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முலாயம் சிங் ஆட்சியின்போது இந்த தீர்மானத்தை எதிர்த்ததன் மூலம், ‘இந்தியா’ என்ற பெயருக்கு பாஜ எதிரானதல்ல எனவும், அதனை ‘பாரத்’ என மாற்ற நினைப்பது எதிர்க்கட்சி கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்ததுதான் காரணம் என்பதை காட்டுவதாக அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆங்கிலேயர் பெயரில் உள்ள இடங்களுக்கு வேறு பெயர்களை வைத்து தேசப்பற்று தங்களுக்குதான் உள்ளது போல் காட்டிக் கொள்ளும் பாஜ தற்போது எடுத்துள்ள ‘பாரத்’ நிலைப்பாடு, ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையை பார்த்து அஞ்சி நடத்தப்படும் நாடகம் தான் என பல தரப்பினரும் விமர்சிக்கின்றனர்.

The post 2004ல் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு; பாஜவின் ‘பாரத நாடகம்’ அம்பலம்: இந்தியா கூட்டணிக்கு அஞ்சி தேர்தலுக்கான நிலைப்பாடு எடுத்துள்ளதாக விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Baja ,Ambalam ,India ,Mumbai ,Union Baja Government ,Bharat Nation ,
× RELATED ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி...