×

நிபா வைரஸ் பரவல் எதிரொலி: மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: கடந்த சில நாட்களாக கேரளாவில் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரசால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. நிபா வைரஸ் பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. கேரளாவில் நிஃபா வைரசால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவலை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், நோயுற்ற, அறிகுறி உடைய நோயாளிகளை கையாண்ட பிறகு 20 நொடிகள் சோப்பால் கை கழுவிய பிறகே சுகாதார பணியாளர்கள் இதர பணிகளை மேற்கொள்ளவேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்கள் பிபிஇ கிட் அணிவதுடன், முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிவது அவசியம்.

மருத்துவ உபகரணங்கள் தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம். பயன்படுத்தப்பட்ட சிரஞ்ச் ஊசியை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம், பயன்படுத்திய ஊசிகளை மூடிய கலனில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் தொடர்பாக மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். தேவைப்படும் நபர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நிபா வைரஸ் காய்ச்சல் பிரிவு, அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டோர் பிரிவில் எக்காரணம் கொண்டு ம் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிபா வைரஸ் பரவல் எதிரொலி: மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Tags : Nipa ,Outbreak Echoing ,Chennai ,Kerala ,Nipa Virus Outbreak Echoing ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...