உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் இருமாதங்களுக்கு ஒருமுறை மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், விழா நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று 12ம்தேதி செவ்வாய்கிழமை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி, குமரவிடங்கப்பெருமான் தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம்நாள் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து பிள்ளையார் தேர் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, 6.35 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் எழுந்தருளிய பெரியதேர் காலை 6.40 மணிக்கு புறப்பட்டது. காலை 7.30 மணிக்கு பெரிய தேர் நிலைக்கு வந்தது. காலை 7.40 மணிக்கு புறப்பட்ட வள்ளியம்மன் தேர் காலை 8.25 மணிக்கு நிலைக்கு வந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த தேர்கள் நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் வந்தடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
முன்னதாக திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், பேரூராட்சி துணைத் தலைவர்கள் ஆறுமுகநேரி கல்யாணசுந்தரம், உடன்குடி சந்தையடியூர் மால்ராஜேஷ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (14ம்தேதி) வியாழக்கிழமை பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி, அம்மன் மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சேர்கின்றனர்.
அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கின்றனர். வரும் 15ம்தேதி (வெள்ளி) நடைபெறும் 12ம் திருவிழா அன்று மாலை சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதி உலா வந்து, வடக்குரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் மண்டபத்திற்கு சேர்கிறார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி, அம்மன் தனித்தனி மலர்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.