×

குணப்படுத்த முடியாத நோய் அல்ல ‘போலியோ’: 5 வயதில் முடங்கியவர் 29 வயதில் நடந்தார்

திண்டிவனம்: ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கபட்டு நடக்க முடியாமல் தவித்த 29 வயது பெண்ணுக்கு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உயர்தர சிகிச்சை அளித்து நடக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.  ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் போலியோ நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, நடக்க விடாமல் முடக்கி விடுகிறது. உலக அளவில், சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான பேர் போலியோவால் முடமாயினர். 1957ல, ‘ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது.

இந்தியாவில், 2011 லேயே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. ‘இந்தியா போலியோ இல்லாத நாடு’ எனும் நற்சான்றிதழையும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கொடுத்தது. ஆனால் போலியோ முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. ஒரு சில குழந்தைகள் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் போலியோ பாதித்தவர்களை சரி செய்து நடக்க வைக்க முடியும் என்று திண்டிவனம் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகள் ஜான்சிராணி (29). இவருக்கு 5 வயதிலேயே போலியோ (இளம்பிள்ளை வாதம்) தாக்கி இடது கால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் இவரால் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.

இந்நிலையில், திண்டிவனம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அங்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையறிந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவர் சுரேஷை, ஜான்சிராணியின் பெற்றோர் அனுகியுள்ளனர். அவர் அரசு மருத்துவமனையில் ஜான்சிராணியை சேர்த்து, 8 மாதமாக தொடர் சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் ஊனமாக இருந்த இடது காலில், 5 சென்டிமீட்டர் வரை எலும்பை வளர செய்து, இரு கால்களும் ஒரே மட்டமாக்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இரண்டு காலையும் சம நிலைக்கு கொண்டு வந்து ஜான்சி ராணியை டாக்டர்கள் நடக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் சுரேஷ் கூறுகையில், போலியோ தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையை அணுகினால் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் சிறந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு சரி செய்ய முடியும். ஜான்சிராணிக்கு தற்போது 29 வயது ஆகிறது. இவர் முன்கூட்டியே அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தால் முன்னதாகவே சிறந்த முறையில் சிகிச்சை அளித்து சரி செய்திருக்கலாம். இதுபோன்று மற்றொரு சிறுவனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் நடக்க உள்ளான் என்று தெரிவித்தார். ஐந்து வயதில் இருந்து நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த ஜான்சி ராணி, 29வது வயதில் மற்றவர்களைப்போல நடப்பதைப் பார்த்து பெற்றோர் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு ஜான்சிராணியும் அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்.

The post குணப்படுத்த முடியாத நோய் அல்ல ‘போலியோ’: 5 வயதில் முடங்கியவர் 29 வயதில் நடந்தார் appeared first on Dinakaran.

Tags : Government Hospital of Thindivanam ,
× RELATED பெரம்பலூரில் விஜய மெட்டல் மார்ட் நிறுவன கிடங்கில் தீ விபத்து