×

தெளிவு பெறுஓம்: கடன் வேறு கடமை வேறா?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கடன் வேறு கடமை வேறா?
– ராஜகோபால், தேனி.

பதில்: இரண்டும் வெவ்வேறுதான். பயன்பாட்டில் ஒரு உதாரணத்தோடு சொல்கின்றேன். ஒரு தந்தை தன்னுடைய பிள்ளையைப் படிக்க வைப்பதும், ஒரு குறிப்பிட்ட வயது வரை காப்பாற்றுவதும், கட்டிய மனைவியை காப்பாற்றுவதும், அதேபோல மனைவி ஒரு கணவனுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், அதேபோல வளர்ந்த பிறகு வயதான பெற்றோர்களை பிள்ளைகள் காப்பாற்றுவதும் கடமைகள். ஆனால், கடன் என்பது நாம் செய்தே ஆக வேண்டியது. அப்படி இல்லாவிட்டால், கடன் எப்படி வட்டியோடு வளர்ந்துவிடுமோ, அதைப்போல செய்யாததால் வரும் குற்றங்களும் தோஷங்களும் வளர்ந்துவிடும். உதாரணமாக, நம்முடைய சமயத்தில் மூன்று கடன்களைச் சொல்லி இருக்கின்றார்கள். தேவர்களுக்குச் செய்ய வேண்டிய ‘‘தேவகடன்’’ ரிஷிகளுக்கு செய்ய வேண்டிய ‘‘ரிஷிகடன்’’ அதைப் போலவே முன்னோர்களுக்குச் செய்ய வேண்டியநீத்தார் வழிபாடு (பிதுர்கடன்). இவைகள் செய்யாவிட்டால் அதனால் வருகின்ற பாவங்கள் கடனோடு சேர்ந்த வட்டி போல வளர்ந்து விடும்.

? இயற்கையை வணங்கினால் கடவுளை வணங்கியது போல என்கிறார்களே?
– பாலசரஸ்வதி, அரியலூர்.

பதில்: உண்மைதான். நம்முடைய சமய உண்மைகள் இதைத்தான் தெரிவிக்கின்றன. நாம் மழையை வணங்குகின்றோம். மண்ணை வணங்குகின்றோம். காற்றை வணங்குகின்றோம். மரங்களை வணங்குகின்றோம். பல திருத்தலங்களில் தல விருட்சமாக பல்வேறு மரங்களை வளர்க்கின்றோம். பூக்களை வணங்குகின்றோம். நீரை வணங்குகின்றோம். அதற்கென்று தனியாக மாசிமகம் போன்ற திருவிழாக்களைக் கொண்டாடுகின்றோம். நிலவை வணங்குகின்றோம். சூரியனை வணங்கி பொங்கல் வைத்துப் படைக்கின்றோம். மாடுகளை, கோ பூஜை செய்து வணங்குகின்றோம். யானையை, கஜ பூஜை செய்து வணங்குகின்றோம். தீயை, வணங்குகின்றோம்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வாகனமாக ஒவ்வொரு விலங்கை வைத்திருக்கின்றோம். காக்கைக்கும் நாய்க்கும் உணவளிக்கின்றோம். சிற்றுயிரான எறும்புக்கு அரிசிமாவால் கோலமிட்டு உணவு அளிக்கின்றோம். அவ்வளவு ஏன், விஷமுள்ள நாகங்களைக் கூட நாகசதுர்த்தி என்று ஒரு தினம் வைத்து வணங்குகின்றோம். இவைகள் எல்லாம் சகல உயிர்களிடத்திலே நாம் கொண்டிருக்கின்ற அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் செயல்கள். அதை அப்படியே சடங்குகள் ஆக்கி நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் இயற்கையை வணங்குகின்றவர்கள் நாம்.

?வெறும் ஏட்டுப் படிப்பு கடவுளை அடைய உதவுமா?
– கண்ணப்பன், செங்கல்ப்பட்டு.

பதில்: ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்குஉதவாது. கடவுளைப் பற்றிய படிப்பு கடவுளைக் கொண்டு வந்து சேர்க்காது. இனிப்பு என்று எழுதிய காகிதத்தை எத்தனைதான் நாக்கில் வைத்தாலும் இனிக்காது. அதனால் தான் சுய அனுபவமாக நம்முடைய ஆன்றோர்கள் தங்களுடைய தெய்வ அனுபவத்தை எழுதி வைத்தார்கள். அதற்கு உதாரணமாகத்தான், ‘‘நான் கண்டு கொண்டேன்’’ ‘‘என் நாவுக்கே’’ என்று சுய அனுபவமாக சொல்லி வைத்தார்கள். காரணம், முயற்சி செய்யாமலேயே, சில பேர் எனக்கு அந்த அனுபவம் இல்லையே என்று சொல்வார்கள். அது மட்டும் இல்லை. தெய்வீக அனுபவம்கூட அவரவர்களுக்கு வேறுபடுவது உண்டு.

? தீய பழக்கங்களில் இருந்து மீள வழி என்ன?
– பிரபுராம், ராணிபேட்டை.

பதில்: இருட்டை விலக்குவதற்கு ஒரே வழி அங்கே வெளிச்சம் தருகின்ற ஒரு விளக்கைப் போடுவதுதான். விளக்கைப் போடுகின்ற செயல் செய்யாத வரை, என்னதான் முயன்றாலும், இருட்டு விலகாது. அதைப் போலவே, தீய பழக்கங்களில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களைக் கைகொள்வதுதான். நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது தீய பழக்கங்கள் தானாகவே விடைபெற்றுச் சென்றுவிடும் என்பது அனுபவ உண்மை.

நல்ல மணமுள்ளதொன்றை நண்ணி
இருப்பதற்கு நல்ல மணமுண்டாம் – நயமதுபோல் – நல்ல
குணமுடையோர் தங்களிடம்
கூடியிருப்பார்க்கு
குணமதுவேயாம் சேர்த்திகொண்டு
என்ற பாடல் இதனை தெரிவிக்கும்.

?நம்மை யார் அதிகம் ஆட்டி படைக்கிறார்கள்?
– சுலோச்சனா, திருநெல்வேலி.

பதில்: நம்மை ஆட்டிப்படைப்பது வேறு யாருமில்லை, நம்முடைய மனதுதான். மனதின் பிடியிலிருந்து அவ்வளவு எளிதாக விடுபட முடியாது. அதற்கு உதாரணமாக இந்த திருமங்கை ஆழ்வார் பாசுரத்தைச் சொல்லலாம்.

உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி
நின்று உண்ணும்
கொள்ளி மேல் எறும்பு போலக் குழையுமால்
என் தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய்
உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை யல்லால் எழுமையும்
துணை யிலோமே

மனது ஒரு நிலையில் நிற்காது. கிளைக்கு கிளை தாவுகிறது. நல்ல விஷயங்களைக் கேட்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், உடனே மாறிவிடுகிறது. கெட்ட விஷயங்களையே பற்றினாலும் அவற்றிலாவது நெஞ்சு நிலைத்து நிற்கிறதோ; அதிலும் தோள் மாறுகின்றது, ஒன்றிலும் நிலைத்து நிற்பதில்லை; இப்படிப்பட்ட நெஞ்சைப் படைத்திருக்கையாலே, கொள்ளிக் கட்டையில் அகப்பட்டுக் கொண்ட எறும்புபோலே துடித்து நின்றேன் என்கிறார்.

அர்ஜுனன், கீதையில் கண்ணபிரானை நோக்கி‘‘சஞ்சலம் ஹி மந க்ருஷ்ண!’’ என்கிறான். அவனே அவ்வார்த்தை சொல்லும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு? சரி, இதற்கு வழி இல்லையா என்று கேட்கலாம். ‘‘இதிலிருந்து மீள, தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட உன் துணையைத்தான் நம்பி இருக்கிறேன்” என்று மீளும் வழியைத்தான் பாசுரத்தில் சொல்கிறார் நாமும் அவனையே நம்புவோம்.

? திரும்பியே வராதது எது? உயிர் தானே?
– ஆனந்தராவ், திருச்சி.

பதில்: போன உயிர் திரும்பி வராது என்று சொல்கிறார்கள். ‘‘ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டவர் திரும்பி வருவரோ?’’ என்று ஒரு பழமொழியே இருக்கிறது. ஆனால், உயிர் மறுபிறவி எடுக்கும் என்கிறார்கள்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

எனவே, நம்முடைய மத நம்பிக்கையின் படி, போன உயிர் வேறு உருவத்தில், வடிவத்தில் திரும்பி வந்துவிடும். ஆனால், திரும்பி வராதது ஒன்று உண்டு. அதுதான் நேரம். சர்வ சாதாரணமாக நாம் வீணடிக்கும் நேரம், திரும்பிவருமா? கோடி ரூபாய் கொடுத்தாலும் திரும்பிவருமா? கடந்து போன நேரம் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அதனால்தான் நம்முடைய சான்றோர்கள், நேரத்தை சரியாக பயன்படுத்தச் சொன்னார்கள். நேரத்தைச் சரியாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் தான் எனக்கு நேரம்
சரியில்லை என்று சொல்வார்கள்.

?சில பேர் ஓஹோ என்று இருக்கிறார்கள். துன்பமே இல்லாதது போல் வாழ்கிறார்களே?
– சண்முக பிரியா, மைசூர்.

பதில்: உங்களுக்கு அப்படித் தெரிகிறது. தன்னுடைய கஷ்டத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வாழ்வது என்பது ஒரு கலை. அதற்கு ஒரு பக்குவம் வேண்டும். பெரும்பாலும் வாழ்க்கை தூரத்து பச்சையாகத்தான் இருக்கிறது. ஒரு அருமையான பாடல் இதற்கு விளக்கம் அளிக்கும்.

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
மழை நாளில் உன் கண்கள் வெயில் தேடும்
கோடை வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்
அது தேடி இது தேடி அலைகின்றாயை
வாழ்வில் எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்

தூரத்தில் பார்த்தால் மெழுவர்த்தியின் ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பார்த்தால் உருகி கண்ணீர் வடிப்பது புரியும்.

? அதிர்ஷ்டத்தை கல்வி தருமா?
– ரேஷ்மா, விஜயவாடா.

பதில்: அதிர்ஷ்டத்தை கல்வி தராது. ஆனால், அதிர்ஷ்டத்தை அது அடையாளம் காட்டி பிடித்து வைத்துக் கொள்ளும், அறிவைத் தரும்.

? வரும் வராது என்பது என்ன?
– சேகரன், கோபிசெட்டிபாளையம்.

பதில்: ஒருவர் பணம் சம்பாதிக்கிற அளவுக்கு முறையாகச் செலவு செய்வதில்லை. செலவு செய்யவும் முடியாது என்பதுதான் உண்மை. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால் என்ன செலவு செய்துவிடமுடியும்? சேர்த்து வைக்கக்கூடிய அத்தனை பணமும்கூட வராது என்பது நன்றாகவே தெரியும். எதுகூட வரும்? இதோ பட்டினத்தார் பாடல்.

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழிஅம்பு பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே
சேர்த்த பொருளை பல வழிகளில் சேர்த்து இருப்போம்.

அப்படி தீய வழிகளில் சேர்த்த பணத்தால் வரும் பாவம் மட்டும் சேர்ந்தே வரும். எனவே வரும் வராது என்பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

1. சேர்த்த பொருள் எதுவும் கூட வராது.
2. ஆனால் சேர்க்கும்போது செய்த பாவம் மட்டும் கூட வரும்.

? வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
– கௌசல்யா, மானாமதுரை.

பதில்: வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டாம். காரணம், வெற்றி என்பது ஒரு மாயையான விஷயம்தான். உங்கள் வெற்றியை இன்னொருவர் முறியடிக்கும் போது நீங்கள் தோற்றுவிடுவீர்கள். ஆனால், வாழ்க்கையை சரியாக எதிர்கொள்ள வேண்டும். பரபரப்பின்றி எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்கள். 1. பொறுமை 2. சிரிப்பு 3. மௌனம்.

எந்தப் பிரச்னையையும் ஒரு சிரிப்பால் எதிர்கொண்டு எதிர்வினை ஆற்றி சமாளித்துவிடலாம். மௌனம் மகத்தான மருந்து. பல கேள்விகளுக்கு சரியான பதில் தந்துவிடும். “சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை” என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன். அதைப்போலவே பொறுமை. தனக்கு கிடைக்கப் போகின்ற நேரத்தில் பொறுமை இழந்து தவறவிட்ட எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். எனவே பொறுமை என்பது நமக்கு பூமி கற்றுத் தந்த பாடம்.

? உடலுக்கு உணவு முக்கியம் தானே?
– சி.மாரியப்பன், உத்தமர் கோயில்.

பதில்: நிச்சயம் முக்கியம்தான். உணவுக்காகத் தான் இத்தனை அலைச்சல். அன்னமின்றி உயிர் வாழ்க்கை வாழ முடியாது. ஆனால், அந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்று திருவள்ளுவர் நமக்கு வழி சொல்லி இருக்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை. வாழ்வதற்காக உண்ண வேண்டுமே தவிர உண்பதற்காக வாழக் கூடாது. சுவாமி வேதாத்திரி மகரிஷி மிகஅருமையாகச் சொல்லுவார். அளவாக உணவு சாப்பிட்டால் உடல் ஜீரணிக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் சாப்பிட்ட உணவே உடலை ஜீரணித்துவிடும்.

?அது என்ன 108 திவ்ய தேசங்கள்?
– லலிதா சரவணகுமார், பழநி.

பதில்: ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம்,‘‘வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?’’ என்று கேட்க, ‘‘ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச’’ என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக, பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தையும் சேர்த்தால் 108. பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம்
– சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட
நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்”

அதாவது, சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார். இன்னொரு கோணம் உண்டு. எந்தெந்த தலங்களை ஆழ்வார்கள் தமிழால் பாடியிருக்கிறார்களோ, அந்தத் தலங்களை திவ்ய தேசம் என்று சொல்வது வைணவ மரபு. பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்பணைத்தோள் எருத்தலைப்பப்பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்றபச்சைப் பசுங்கொண்டலே.தமிழ் ஒலிக்கும் இடம் நோக்கி பாம்புப் பாயோடு திருமால் புறப்பட்டு விடுவாராம். இதை விட தமிழுக்கு ஏற்றம் என்ன இருக்க முடியும்?

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுஓம்: கடன் வேறு கடமை வேறா? appeared first on Dinakaran.

Tags : Rajagopal ,Theni ,Dinakaran ,
× RELATED தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே புக்கிங்...