×

கூடங்குளம் கடலில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க இலங்கையில் இருந்து அதிநவீன இழுவை கப்பல் இன்று மாலை வருகை

கூடங்குளம்: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு ெதாழில் நுட்பத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர 3 மற்றும் 4வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளன. 5 மற்றும் 6வது அணுஉலைகளுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த 5 மற்றும் 6வது அணுஉலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கப்பலில் கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தது.

அங்கிருந்து ஏற்கனவே 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் வந்து சேர்ந்த நிலையில், எஞ்சிய 2 ஜெனரேட்டர்களும் மிதவை கப்பலில் ஏற்றப்பட்டு, இழுவை கப்பல் மூலம் கடல் வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இழுவை கப்பல் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் வரும் போது, மிதவை கப்பலை இழுக்க பயன்படுத்தப்பட்ட உலோக கயிறு அறுந்தது. இதைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக மிதவை கப்பல் கடல் அலையில் அந்த பகுதியில் உள்ள பாறையில் தட்டி நின்றது. மிதவை கப்பலை மீட்க சென்னை துறைமுகம் மற்றும் மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை செய்தும் முடியவில்லை.

இந்நிலையில் இலங்கையிலிருந்து அதிக இழுவை திறன் கொண்ட அதிநவீன இழுவை கப்பலை கூடங்குளத்திற்கு கொண்டு வர இந்திய அணுசக்தி கழக அதிகாரிகள் ஒன்றிய அரசை வலியுறுத்தினர். அதன்படி ஒன்றிய அரசின் இந்திய அணுசக்தி துறை உயரதிகாரிகள், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இழுவை கப்பலை கூடங்குளத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். அந்த கப்பல் இன்று மாலைக்குள் கூடங்குளம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இன்று இரவோ அல்லது நாளை காலையோ மிதவை கப்பலை மீட்கும் பணிகள் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.

The post கூடங்குளம் கடலில் தரை தட்டிய மிதவை கப்பலை மீட்க இலங்கையில் இருந்து அதிநவீன இழுவை கப்பல் இன்று மாலை வருகை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Kedangulam Sea ,Needangulam ,India ,Russia ,Schedulam Technique ,Nedalle District ,Dinakaran ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...