×

சிறுவாச்சூரில் கட்டப்படும் பாலத்தில் நீர் கசிவு மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்

*3 ஆண்டுகளில் 10 பேர் பலி

*ஆமை வேகத்தில் நடக்கும் பணி

பெரம்பலூர் : சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் நீர்க்கசிவு காரணமாக, திறப்பு விழா காணும் முன்பாக, மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியில் சாலையைக் கடக்கும் விவசாயிகள், பொதுமக்கள் ஆண்டுக்கு நான்கைந்து பேர் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டு வந்தது.இதனால் சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து 2016 ஜூலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை திட்ட இயக்குநர் பிரஷாத் ரெட்டி சிறுவாச்சூருக்கு வந்து இருவழி உயரமட்ட மேம்பாலம் அமையக்கோரும் இடத்தைப் பார்வையிட்டு கள ஆய்வு அறிக்கையை அனுப்பி வைத்தார். இதனையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பாக ரூ.13.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2018ம்ஆண்டு மே மாதம் 14ம்தேதி மேம்பாலம் கட்டுவதற்காக, பொன்.ராதாகிருஷ்ணன் மூலமே அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த மேம்பாலம் 12 மீட்டர் அகலமும் 5.50மீட்டர் உயரமும், விழுப்புரம் மார்க்கத்தில் 161.30 மீட்டர் நீளமும், திருச்சி மார்க்கத்தில் 355.95 மீட்டர் மற்றும் 402.56 மீட்டர் நீளமும் கொண்டதாக அறிவித்து தொடங்கப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட தோடு கிடப்பில் போடப்பட்ட இந்த மேம்பால கட்டுமான பணிகள் 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. 2023 ஜனவரி மாதம் வரை பணி நடக்கிறதா நிறுத்தப்பட்டுவிட்டதா எனத் தெரியாமல் 5 ஆண்டுகளாக ஆமை வேகத்தைவிட மிககுறைந்த வேகத்தில் நடந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் சிறுவாச்சூர் மேம்பாலம் மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப்பிடிக்காமல் நீர்க் கசிவும், விரிசலும் ஏற்பட்டுள்ளது. திறப்பு விழா காணும் முன்பாக மராமத்து பணிகளை மேற்கொள்ளும் அவல நிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக நீர்க்கசிவைத் தடுக்கும் தார்ப்பாய் பேஸ்டுகளை பாலத்தீன் உட்புறம் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் வெயிலுக்கு தாங்காமல் விரிசல்விட்ட இடங்களை சிமென்டால் பூசி, அதுவும் வெளியே தெரியாதபடிக்கு தார்ப்பாய் பேஸ்ட் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஊர் பொதுமக்கள், கனரக வாகன ஓட்டிகள் திறப்பு விழா காணும் முன்பாக, மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பிறகே திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

* தமிழக அளவில் அதிகப்படியான விபத்துக்கள் நடக்கும் 78 பகுதிகளில் 11 இடங்கள் திருச்சி மண்டலத்தில் உள்ளது.

* இதில் ஒன்றாகத்தான் சிறுவாச்சூர் உள்ளது.

* 2014-15ல் ஏற்பட்ட 14 விபத்துகளில் 2 பேர்களும், 2015-16ல் ஏற்பட்ட 21 விபத்துகளில் 4 பேர்களும், 2016-17ல் ஏற்பட்ட 9 விபத்துகளில் 4 பேர்களும் என 3 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

* இப்பகுதி பிளாக் ஸ்பாட் என அறிவிக்கப்பட்டு மேம்பாலம் அமைக்க அனுமதி பெறப்பட்டது.

The post சிறுவாச்சூரில் கட்டப்படும் பாலத்தில் நீர் கசிவு மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Siruvachur ,Perambalur ,Siruvachur National Highway ,Dinakaran ,
× RELATED சிறுவாச்சூர் அருகே விபத்தை...