×

வேலூர் முள்ளிப்பாளையம் நிக்கல்சன் கால்வாயில் சிறுபாலம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் நுரையுடன் ஊற்றெடுக்கும் தண்ணீர்

*மாசு கட்டுப்பாடு வாரியம் விளக்கம்

வேலூர் : நிக்கல்சன் கால்வாயில் சிறுபாலம் அமைப்பதற்காக தோண்டப்படும் பள்ளத்தில் ஊற்றெடுக்கும் தண்ணீர் நுரையாக பொங்கி வருவதற்கு நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதே காரணம் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேலூர் நகரின் 60 சதவீத கழிவுநீரை சுமந்து செல்லும் நிக்கல்சன் கால்வாய் மீது வேலூர் முள்ளிப்பாளையத்தில் கட்டப்பட்ட சிறுபாலம் 50 ஆண்டுகளை கடந்து விட்ட பாலம் என்பதால் அதை இடித்து விட்டு புதிய சிறுபாலம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இப்பாலத்துக்கான இருபக்க கான்கிரீட் சுவர் அமைப்பதற்காக நிக்கல்சன் கால்வாயில் உள்ள கழிவுநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், அடித்தளத்துக்கான பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

சுமார் 10 அடிக்கும் மேல் தோண்டப்பட்ட இப்பள்ளத்தில் ஊற்றெடுக்கும் நீரும் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் ஊற்று நீர் நுரையாக பொங்கி வருவதுடன் ஒருவித துர்நாற்றமும் வீசுவதாகவும், இதன் மூலம் நிக்கல்சன் கால்வாயின் நிலத்தடி நீர் மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரும் மாசடைந்ததற்கு சாட்சியாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதனால்தான் இப்பகுதிகளில் போர்வெல்களில் வரும் நீர் உப்புத்தன்மையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக வேலூர் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வேலூர் மாநகராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிக்கல்சன் கால்வாயில் கான்கிரீட் தரைதளம் அமைக்கப்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் நிலத்தில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. அதேநேரத்தில் அதற்கு முன்னதாக ஓடிய கழிவுநீரின் தாக்கமாக இருக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டால் அந்த நீரின் மாதிரியை எடுத்து சோதனை மேற்கொள்ளலாம். அப்படி சோதனை செய்த பின்னர்தான் எதுவும் சொல்ல முடியும்’ என்றனர்.
வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அதுபற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை’ என்று முடித்துக் கொண்டனர். எனவே, வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து, கழிவுநீர் அனைத்தையும் சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும்’ என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் முள்ளிப்பாளையம் நிக்கல்சன் கால்வாயில் சிறுபாலம் அமைக்க தோண்டிய பள்ளத்தில் நுரையுடன் ஊற்றெடுக்கும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Nicholson Canal ,Vellore ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...