×

அதிமுக ஆட்சியில் மூடுவிழா, கஜா புயலில் சேதம் R75 லட்சத்தில் உழவர் சந்தை புதுப்பொலிவு

*தரைதளத்துடன் கூடிய 16 கடைகள் அமைப்பு

*22 ஆண்டுகளுக்கு பிறகு பணி தீவிரம்

திருவாரூர் : அதிமுக ஆட்சியில் மூடு விழா கண்டு, கஜா புயலால் மேற்கூரை இழந்த திருவாரூர் உழவர் சந்தை ரூ.75 லட்சத்தில் மீண்டும் புது பொலிவு பெற்று வருகிறது. தரை தளத்துடன் கூடிய 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வந்த நிலையில், காய்கறி உள்ளிட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் குறைந்த விலையில் தரமான காய்கறிகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி விரும்பினார்.

அதன் படி நெல் விவசாயம் தவிர்த்து மற்ற விவசாயிகள் பயனடையும் வகையில், 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு திமுக ஆட்சியில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலரும் தங்களது காய்கறிகள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயனடைந்து வந்தனர். கடைகளுக்கு வாடகை ஏதுமின்றி தராசு படிகற்கள் உள்ளிட்டவையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் அதன் பின்னர் ஏற்பட்ட அதிமுக ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில் உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட ஒரு சில உழவர் சந்தைகள் மட்டும் தற்போது வரையில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
மேலும் திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த நிலையில் உழவர் சந்தைக்கும் மூடுவிழா நடந்தது. உழவர் சந்தை கட்டிடம் கட்டப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் இருந்து வரும் கடைகளின் மேற்கூரையும் சேதமடைந்தது.

இந்நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியதுவம் அளித்து வரப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் உழவர் சந்தை கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என சிறு, குறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்த உழவர் சந்தை கட்டிடத்தை புதுப்பித்து கட்டுவதற்கு எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் பெரும் முயற்சியின் காரணமாக அதிகாரிகள் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனால் அரசு மூலம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உழவர் சந்தையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணி கடந்த மே மாதம் 19ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

இந்த புதிய கட்டிடமானது தற்போது மும்முரமாக கட்டப்பட்டு வரும் நிலையில், 2 அடி உயரத்தில் தரை தளம் அமைக்கப்பட்டு, அதன் பின்னர் மேற்கூரைகளுடன் 8 அடி நீளம், 6 அடி அகலம் அளவில் 16 கடைகள் அமைக்கப்பட்ட உள்ளன.இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

*உழவர் சந்தை கட்டிடம் கட்டப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. கடந்த 2018ம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக இந்த உழவர் சந்தையில் இருந்து வரும் கடைகளின் மேற்கூரையும் சேதமடைந்தது.

*அதிமுக ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில் உழவர் சந்தைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உட்பட ஒரு சில உழவர் சந்தைகள் மட்டும் தற்போது வரையில் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

The post அதிமுக ஆட்சியில் மூடுவிழா, கஜா புயலில் சேதம் R75 லட்சத்தில் உழவர் சந்தை புதுப்பொலிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK government ,Gaja ,Tiruvarur ,AIADMK ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...