×

நகராட்சியில் பையோ மைனிங் மூலம் 38 ஆயிரம் டன் குப்பை இயற்கை உரமாக மாற்றம்

*விவசாயிகளுக்கு விநியோகம்

தர்மபுரி : தர்மபுரி நகராட்சியில் சேகரிக்கப்படும் 38 ஆயிரம் டன் குப்பை, பையோ மைனிங் மூலம் (உயிரிஅகழாய்வு) இயற்கை உரமாக தயாரித்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் இருந்து தினசரி 28 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை பென்னாகரம் சாலையில் நகராட்சி குப்பைமேட்டில் கொட்டப்பட்டது. அங்கு குப்பை நிரம்பியதால், தடங்கம் ஊராட்சியில் 11 ஏக்கர் காலிநிலம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

நகராட்சி குப்பைமேட்டில், காற்று மற்றும் வெயில் காலங்களில் அடிக்கடி தீ பிடித்ததால், அருகில் உள்ள கிராமங்களுக்கு தொந்தரவாக இருந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டது. இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகராட்சி குப்பைமேட்டில் ₹3 கோடி மதிப்பீட்டில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு, இயந்திரங்கள் மூலம் உயிரிஅகழாய்வு (பையோ மைனிங்) என்ற முறையில், நுண்ணுயிர் உரமாக மாற்றப்படுகிறது.

அங்குள்ள குப்பைகளை தரம் பிரித்து, உரமாகவும், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், கற்கள் என தரம் பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு, 43 ஆயிரம் டன் பழைய உரங்கள் தரம் பிரித்து அகற்றப்பட்டது. தற்போது 38ஆயிரம் டன் உரம் தயாரிக்கவும், மக்காத பொருட்கள் தரம்பிரித்து அகற்றும் பணி, பையோ மைனிங் மூலம் நடந்து வருகிறது. இதில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள், ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

ஒப்பந்ததாரர்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரம் விநியோகம் செய்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தால் பையோ மைனிங் மூலம் தயாரிக்கப்படும் உரங்கள், தற்போது தர்மபுரி வள்ளலார் திடலில் நடக்கும் புத்தக கண்காட்சியில், பார்வைக்கு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த உரங்களை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கலெக்டர் சாந்தி ஆகியோர் பார்வையிட்டு கேட்டறிந்தனர். அப்போது நகராட்சி ஆணையர் புஷ்பாகரன் உடனிருந்தார். இதுகுறித்து தர்மபுரி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தர்மபுரி நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 28 டன் குப்பை, தடங்கம் ஊராட்சியில் உள்ள குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 11 ஏக்கரில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், 5 ஏக்கரில் இருந்த குப்பை, கடந்த 3 ஆண்டில் ₹3 கோடி செலவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள 6 ஏக்கரில் 38 ஆயிரம் டன் குப்பை உள்ளது. இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்ய, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பையோ மைனிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை இயந்திரம் மூலம் அரைக்கப்பட்டு, மண்ணாக மாற்றப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் 7 மாதங்கள் நடக்கும். ஏற்கனவே 6 ஏக்கரில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டதால், 2500 நாட்டுரக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 5 ஏக்கரிலும் குப்பைகள் இல்லாத நிலை வரும் போது, அந்த இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து, காடு போல் உருவாக்குவோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post நகராட்சியில் பையோ மைனிங் மூலம் 38 ஆயிரம் டன் குப்பை இயற்கை உரமாக மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Piyo Mining ,Darmapuri ,Bio ,Pio Mining ,Dinakaran ,
× RELATED உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ரூ.294,83 கோடி...