×

குல்தீப் சிறப்பாக பந்து வீசுவது நிச்சயம் அணிக்கு நல்ல அறிகுறி: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

கொழும்பு: 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் தற்போது கொழும்பில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-இலங்கை மோதின. டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்தது. கில் 19, விராட் கோஹ்லி 3, ரோகித்சர்மா 53, இஷான்கிஷன் 33, கே.எல்.ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 5, ஜடேஜா 4, அக்சர் பட்டேல் 26, பும்ரா, சிராஜ் தலா 5 ரன் எடுத்தனர். 49.1ஓவரில் 213 ரன்னுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது. இலங்கை பவுலிங்கில் வெல்லாலகே 5, சாரித் அசலங்கா 4 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியில் பதும் நிசங்கா 6, கருணாரத்னே 2, குசால் மெண்டிஸ் 15, சதீரா சமரவிக்ரமா 17, சாரித் அலங்கா 22, கேப்டன் ஷனகா 9 ரன்னில் வெளியேற தனஞ்செயா டிசில்வா 41 ரன் எடுத்தார். 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு இலங்கை ஆல்அவுட் ஆனது. இதனால் 41ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 42 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4, ஜடேஜா, பும்ரா தலா 2, சிராஜ், ஹர்திக்பாண்டியா தலா ஒருவிக்கெட் எடுத்தனர். வெல்லாலகே ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, நேற்று 2வது வெற்றியால் இறுதிபோட்டிக்கு முன்னேறியது. முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை சம்பிரதாய மோதலாக வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ரோகித்சர்மா அளித்தபேட்டி: இது மிக நல்ல ஆட்டமாக இருந்தது. இப்படியான ஆட்டம் எங்களுக்கு தேவையாகவும் இருந்தது. இதன் மூலம் எங்கள் விளையாட்டு பல அம்சங்களை நாங்கள் பரிசோதித்து சவால் செய்து கொண்டோம். இது போன்ற ஆடுகளத்திலும் நாங்கள் விளையாட நினைத்தோம். அப்போதுதான் எங்களால் எப்படி செயல்பட முடிகிறது என்று எங்களுக்கு தெரியும்.

ஹர்திக் பாண்டியா தன்னுடைய பந்துவீச்சில் கடும் உழைப்பை செலுத்தி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய பந்துவீச்சு நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஓவர் வீசிய விதம் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை கொடுத்தது. ஆடுகளம் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சிறப்பாக மாறியது. இதனால் இலக்கை எங்களால் தற்காத்துக் கொள்ள முடியாத நிலைதான் இருந்தது. இதனால் நாங்கள் ஒரு புறத்தில் அழுத்தத்தை வைக்க வேண்டியது இருந்தது. குல்தீப் யாதவ் பிரமாதமாக பந்து வீசி வருகிறார். தன்னுடைய பந்துவீச்சும் முறைக்காக அவர் பெரிய அளவில் உழைப்பை செலுத்தி இருக்கிறார். அதற்கான விளைவுகளை தான் நாம் கடந்த 15 போட்டிகளாக பார்த்து வருகிறோம்.

குல்தீப் இப்படி சிறப்பாக பந்து வீசுவதன் மூலம் எங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கிறது. இது நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாகும், என்றார். தோல்வி குறித்து இலங்கை கேப்டன் ஷனகா கூறியதாவது : ”இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ஆனால் முதல் 10 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுடன் சிறப்பாகப் போட்டிக்கு வந்தோம். வெல்லலகே மற்றும் அசலங்காவின் உண்மையான திறனை நான் அறிவேன். அவற்றைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் எனக்கு கிடைத்தது. பங்களாதேஷுக்கு எதிரான கடைசி ஆட்டத்தைப் பார்த்தபோது,​​வெல்லாலகே இன்று ஏதாவது விசேஷமாகச் செய்வார் என்று எனக்குத் தெரியும், அவர் கோஹ்லியின் விக்கெட்டை எடுத்தார். இன்று அவருடைய நாள், என்றார்.

The post குல்தீப் சிறப்பாக பந்து வீசுவது நிச்சயம் அணிக்கு நல்ல அறிகுறி: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kuldeep ,Rohit Sharma ,Colombo ,Super ,16th Asia Cup cricket ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…