×

விநாயகரை வைத்து அரசியல் செய்வது வேதனை!: சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும்படி விநாயகர் கேட்டாரா?..ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி..!!

சென்னை: விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது; அனைத்தும் எனது சொந்த கருத்து என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 13 இடங்களிலும், கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதி கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலையை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதர் ஆஜராகி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படுவதாக கூறினார். மேலும் அந்தந்த மாவட்டங்களில், அந்தந்த பகுதிகளில் சட்டம் – ஒழுங்கை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலீசார் அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டம் அன்னூரில் இருக்கும் நபர், கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோருவதாகவும், மாறுபட்ட கோரிக்கையை முன்வைப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் ஏற்கப்பட மாட்டாது என்று மனுக்களை முடித்து வைத்தார்.

மேலும், சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கடவுளே கேட்காத நிலையில், விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து விநாயகரை வைத்து அரசியல் செய்வதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இவை அனைத்தும் தமது சொந்த கருத்து என்றும் இறுதியில் சுட்டிக்காட்டினார்.

The post விநாயகரை வைத்து அரசியல் செய்வது வேதனை!: சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும்படி விநாயகர் கேட்டாரா?..ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி..!! appeared first on Dinakaran.

Tags : Visagar ,Icourt ,Chennai ,Vinayekar ,Justice ,Anand Venkatesh ,Dinakaran ,
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து