×

சிவராத்திரி தரிசன தலங்கள்

1 திரியம்பகேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் மகாராஷ்டிரா, நாசிக்கில் உள்ளது. இந்த லிங்க ஆவுடையாரில், பிரம்ம, விஷ்ணு, ருத்ரர் மூவரும் பூஜை செய்த தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.

2 காசியில், ஜோதிர்லிங்கமாக விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். தினமும் இரவில் வில்வதளங்களில் சந்தனத்தால் ராமநாமத்தை எழுதி விஸ்வநாதப் பெருமானுக்கு ஏழு பண்டாக்கள் பூஜை செய்யும் சப்தரிஷி பூஜை புகழ் பெற்றது.

3 குஜராத், வீராவலியில் சோமநாதம் எனும் ஜோதிர்லிங்கத் தலம் உள்ளது. சந்திரனின் (சோமன்) நோயைப் போக்கியவர் இந்த ஈசன். அதனாலேயே சோமேஸ்வரர். இந்திரன், சூரியன், கிருஷ்ணன், ஜனமேஜயன், பாண்டவர் என பலரும் இவரை வணங்கி பேறு பெற்றுள்ளனர்.

4 சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஓங்காரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். பிரணவமான `ஓம்’ எனும் மந்திரம் சதாசர்வகாலமும் இந்த ஈசனை துதித்துக் கொண்டிருப்பதாலேயே அவர் இப்பெயர் பெற்றார்.

5 உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது கேதாரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். இமயமலை மீது கங்கைநதிபாயும் பனி படர்ந்த சூழலில், பாறை வடிவில் அருள்கிறார் கேதாரீஸ்வரர். இத்தல தீர்த்தங்களாக கங்கையும், கௌரிகுண்டமும் விளங்குகின்றன.

6 மத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலத்தில் மகாகாளேஸ்வரராக ஈசன் திகழ்கிறார். மகாகாளி பூஜித்த இந்த ஈசனுக்கு செய்யப்படும் விபூதிக்காப்பும், பஞ்சகவ்ய அபிஷேகமும் பெயர் பெற்றவை.

7 மஹாராஷ்டிரா, எல்லோராவிற்கு அருகில் உள்ளது குஷ்மேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலம். தஞ்சை பெரிய கோயில் விமானம் போன்று கலையழகு கொண்ட கோயில் இது. கருவறை நந்திக்கு முன் ஆமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

8 ஆந்திரம் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. திருமகள் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம். ஆகவே இத்தலம் சைலம்; மல்லிகை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் மல்லிகார்ஜுனம். காசியைப் போன்றே கருவறைக்கே சென்று மல்லிகார்ஜுனரை வழிபடலாம்.

9 ஔரங்காபாத்திற்கு அருகே உள்ளது வைஜயநாத் ஜோதிர்லிங்கத்தலம். அசுரர்களை வெல்ல, முப்பெருந்தேவியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம், வைஜயநாதர். இவரை வழிபட்டால் வெற்றி எளிதாகும்.

10 ராமேஸ்வரம், ஒரு ஜோதிர்லிங்கத் தலம். ராமபிரானின் பாவத்தைப் போக்கியவர் இத்தல ராமநாதர். கோயிலின் பிராகாரமும், சுதையினாலான பெரிய நந்தியும் உலகப்புகழ் பெற்றவை.

11 மஹாராஷ்டிரா, டாகனியில் சிறு மலைமீது பீமசங்கரர் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. பீமனுக்கு அருளிய மூர்த்தி இவர். இவரை நினைத்தாலே சகல வளங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

12 மஹாராஷ்ட்ரா, ஔண்டாவில் நாகநாதம் எனும் நாகேஸ்வரர் ஜோதிர்லிங்கமாக அருள்கிறார். பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம் இந்த ஈசனை பிரதிஷ்டை செய்து வழிபட்டது. இவரை, அவரவர் இடத்திலிருந்தபடியே வேண்டிக்கொண்டாலும் நாகதோஷங்கள் நீங்குகின்றன. பாம்பு ஆபத்தும் உண்டாவதில்லை.

13 பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் திருமூலநாதரே மூலவர். ஆனாலும், நடராஜப் பெருமானே பிரதான மூர்த்தி. மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை உலகிற்குத் தந்த தலம் இது.

14 காளஹஸ்தி காளத்திநாதர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைக் கொம்புகள், உச்சியில் ஐந்துதலை நாகம், வலக் கண்ணில் கண்ணப்பர் பெயர்த்து எடுத்து அப்பிய அவரது கண் வடு ஆகியன காணப்படுகின்றன. இத்தல புராணக் கதைகளைச் சித்திரிக்கும் லிங்கம் இது என்றே வியக்கலாம்.

15 காஞ்சியில் ஏகாம்பரநாதரை தரிசிக்கலாம். காமாட்சி அம்மனால் உருவாக்கப்பட்ட மண் லிங்கம் இவர். இத்தல மாமரம் நான்கு கிளைகளிலும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகளில் கனிகளைத் தருகிறது. உற்சவ ஏகாம்பரேஸ்வரர் 5008 ருத்ராட்சங்களால் ஆன பந்தலின் கீழ் கண்ணாடி அறையில் அருட்பாலிக்கிறார்.

The post சிவராத்திரி தரிசன தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Shivratri ,1 ,Tiriyambagheswaram ,Nashik, Maharashtra ,Brahma ,Vishnu ,Rudra ,
× RELATED வெஜ் மஞ்சூரியன் கிரேவி