×

தாமாக முன் வந்த தனியார் தொண்டு நிறுவனம் ஆறுமுகநேரி அரசு பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைப்பு

ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி அரசு பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணியை தினகரன் செய்தி எதிரொலியாக தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவிகள் இசை, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் மாவட்ட மற்றும் மாநில அளவில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்று வருகின்றனர். ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கால்பந்து, ஓட்டப்பந்தயம், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தும், அதனை பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.

மைதானத்தை சுற்றிலும் முட்புதர்களாக காட்சியளித்தது. இதில் விஷஜந்துகளும் நடமாடின. இதனால் பள்ளி மாணவிகள் முழுமையாக விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக கடந்த ஜூலை 29ம் தேதி படத்துடன் தினகரனில் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று காலை ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான பாலகுமரேசன் ஏற்பாட்டில் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

மேலும் பள்ளியில் கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. இந்த பணிகள், பள்ளி தலைமை ஆசிரியர் சுப்புலெட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பட்டுடால்மியா ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post தாமாக முன் வந்த தனியார் தொண்டு நிறுவனம் ஆறுமுகநேரி அரசு பெண்கள் பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Arumuganeri Government Girls School ,Arumukaneri ,Arumukaneri Government Girls School ,Dinakaran ,
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...