×

நாகை அருகே பட்டாசு ஆலையில் விபத்து முதியவர் தலை சிதறி பரிதாப பலி

*3 பேர் படுகாயம்

வேதாரண்யம் : நாகப்பட்டினம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிற்சாலை உரிமையாளரின் தந்தை தலைசிதறி பலியானார். 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் பகுதியில் ஆஞ்சனேயா என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 5 இடங்களில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன் உரிமையாளர் கஜேந்திரன்.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வெடி தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வெடிகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதனால் 2 கட்டிடம் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் கஜேந்திரனின் தந்தை மணி (65), தூக்கி வீசப்பட்டு தலை சிதறி உயிரிழந்தார். தொழிலாளர்கள் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த மேரிசித்ரா (35), கலாவதி (35), தூத்துகுடியை சேர்ந்த கண்ணன் (34) ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த வேதாரண்யம் மற்றும் வாய்மேடு ஆகிய பகுதியிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீ மேலும் பரவாமல் இருக்க நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். வேதாரண்யம் வட்டாட்சியர் ஜெயசீலன், இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன் பசுபதி, ஜெயந்திர சரஸ்வதி, மற்றும் வாய்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அலறியடித்து ஓடிய மக்கள்

விபத்து நடந்த கட்டிடம் அருகே ஒரு குளம் உள்ளது. இதில் யாரேனும் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் குளத்து நீர், மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. இந்த வெடிவிபத்து ஏற்பட்டபோது அரை கிலோமீட்டர் தூரம் வரை உள்ள வீட்டு கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வெளியே அலறியடித்து ஓடினர்.

The post நாகை அருகே பட்டாசு ஆலையில் விபத்து முதியவர் தலை சிதறி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Nagai ,Padukayam Vedaranyam ,Nagapattinam ,
× RELATED வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த...