×

வெம்பக்கோட்டை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

*அகழாய்வு நடத்த மக்கள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அதிகளவு முதுமக்கள் தாழி கிடைப்பதால், அப்பகுதியிலும் அகழாய்வு நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த அகழாய்வில் பல வண்ண பாசிகள், சுடுமண் வட்டச்சில்லு, சங்கு வளையல்கள், சங்குகளை அறுக்க பயன்படும் பொருள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தாயக்கட்டை, ஆட்ட காய்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அகழாய்வுப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு மிக அருகில் சிவசங்குபட்டி கிராமம் உள்ளது. வைப்பாறு கரையில் உள்ள இந்த கிராமத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் விரிவாக்க பணிகளின்போது கிடைத்த முதுமக்கள் தாழிகளை சிறுவர்கள் விளையாட்டு பொருட்களாகவும், பெரியவர்கள் கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் வெம்பக்கோட்டையில் கிடைத்து வரும் அரிய பொருட்களால் இந்த முதுமக்கள் தாழிகளின் முக்கியத்துவத்தை கிராம மக்கள் உணர்ந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகளை கிராமமக்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வைத்து பாதுகாத்து வந்தனர். நேற்று அதனை வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் தலைமையில் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி இயக்குநர் பாஸ்கர் முன்னிலையில் கண்காட்சியில் வைக்க ஒப்படைத்தனர். சிவசங்குபட்டி கிராமத்திலும் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெம்பக்கோட்டை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vembakkota ,Vembakotta ,Wembokotta ,Dinakaran ,
× RELATED வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா