×

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி … அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியதே காரணம் என தகவல்!!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி பனையூரில் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அதைவிட கூடுதலாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.தரவரிசைப்படி கோல்ட் டிக்கெட் ரூ.2000, பிளாட்டினம் மற்றும் டைமண்ட் போன்ற டிக்கெட்களின் விலை ரூ.5000 மற்றும் ரூ.10000 என நிர்ணயித்துள்ளனர். மேலும் அதற்கு மேல் வைத்தும் அதாவது ரூ.30 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

ஆனால், யார் யார் எந்தெந்த டிக்கெட் வாங்கியுள்ளார்கள் என்று கவனிக்காமல் 35 ஆயிரம் பேர்களை மட்டும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்கு உள்ளே அனுமதித்துள்ளனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய அனைவரும் கடும் கோபமடைந்தனர். இதில் விழாவில் இருந்த பாதுகாவலர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலில் ரசிகர்கள் சிலர் மயங்கியும் விழுந்துள்ளனர். பெண்கள் பலர் கதறி அழுதனர். அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இப்படியொரு பித்தலாட்டமா என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். மேலும் இதன்மூலம் ரசிகர்கள் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியதில் எந்த அனுபவமும் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக சேர்த்ததும் அவர்களுக்கும் எந்த பயிற்சியும் வழங்காததுமே குளறுபடிக்கு முதல் காரணம் என தெரியவந்துள்ளது. கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவர்களை விட அதிகப்படியான நபர்கள் நிகழ்ச்சிக்கு வந்ததால் குளறுபடி ஏற்பட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த முறை மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிவு செய்து, பின் டிக்கெட்டை ரத்து செய்தவர்களில் சுமார் 10,000 பேர் இம்முறை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், உரிய விளக்கங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு போலீசார் அவர்களுக்கு உத்தரவிட்டனர்.

The post ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடி … அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை பணியில் ஈடுபடுத்தியதே காரணம் என தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,AR Rahman ,Dinakaran ,
× RELATED மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்