×

நிபா வைரஸ் எதிரொலி.. தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரம் :கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!!

சென்னை : கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த நோய் பாதித்து இந்த மாவட்டத்தில் மட்டும் 17 பேர் மரணமடைந்தனர். அடுத்தடுத்து பலர் மரணமடைந்ததால் கேரளாவில் அப்போது இந்த நோய் பெரும் பீதியை ஏற்படுத்தியது.இந்நிலையில் கடந்த முறை நிபா வைரஸ் காய்ச்சல் பீதியை ஏற்படுத்திய அதே கோழிக்கோடு மாவட்டத்தில் தற்போது மீண்டும் இந்நோய் பரவத் தொடங்கியுள்ளது. அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையில் நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரபடுத்த தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில்

*கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழ்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.

*நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் 24 x 7 சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

*மேற்குறிப்பிட்ட 6 மாவட்டங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிபா வைரஸ் எதிரொலி.. தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரம் :கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Chennai ,
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...