×

ஒன்றிய அரசு தகவல் 1 கோடி ஜைடஸ் கேடிலா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: இம்மாதமே செலுத்தப்படும்

புதுடெல்லி: ஊசியில்லாத, உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான ஜைடஸ் கேடிலா தடுப்பூசியை ஒரு கோடி டோஸ் வாங்க ஒன்றிய அரசு ஆர்டர் தந்துள்ளது. இம்மாதமே இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட  தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே அரசு தரப்பில் இலவசமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இம்மாதம் புதிதாக ஜைகோவ்-டி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கடந்த மாதம் 20ம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. ஜைகோவ்-டி தடுப்பூசி உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியாகும். இது 3 டோஸ்களைக் கொண்டது. 28 நாள் இடைவெளியில் 3 டோஸ்களை செலுத்திக் கொள்ள வேண்டும். ஊசியில்லா தொழில்நுட்பத்தில் செலுத்தப்படக்கூடியது. இந்த தடுப்பூசியை ஒரு கோடி டோஸ் சப்ளை செய்ய ஜைடஸ் கேடிலா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. தடுப்பூசி சப்ளை செய்யப்பட்ட அடுத்த சில தினங்களில் இந்த தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை 12 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம். ஆனால், தற்போதைக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஜைகோவ் டி செலுத்தப்படும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்து, ஒரு டோஸ் வரிகள் சேர்க்காமல் ரூ.358 என்ற விலையில் அரசுக்கு தரப்படுகிறது. ஊசியில்லாத இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.* உலகளவிலான பாதிப்பு 25 கோடியாக உயர்வுஉலகளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று 25 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 668 பேராக உயர்ந்துள்ளது. இதுவரையில் 50 லட்சத்து 60 ஆயிரத்து 122 பேர் பலியாகி உள்ளனர். 1 கோடியே 86 லட்சத்து 65 ஆயிரத்து 679 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 72 ஆயிரத்து 995 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.* ஏஒய் 4.2 வைரஸ் சாதாரணமானதுடெல்டா வைரசின் புதிய மாறுபாடான ஏஒய் 4.2 மிகக் குறைவான செயல்திறன் கொண்ட உருமாற்ற வகையை சேர்ந்தது என இந்திய சார்ஸ் வைரஸ் மரபணு கூட்டமைப்பு (ஐஎன்எஸ்ஏசிஓஜி) தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ்ஏசிஓஜி என்பது கொரோனா வைரஸ் குறித்தும், அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடங்களின் கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பு வெளியிட்ட வாராந்திர ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டெல்டா வகைகளுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசியை தாண்டி தாக்கும் அளவுக்கு திறன் கொண்டதாக ஏஒய் 4.2 இல்லை என கூறப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் டெல்டா (பி.1.617.2) மட்டுமே கவலைதரக் கூடிய வீரியமிக்க வைரஸ் வகையாக இருப்பதாகவும், புதிய வீரியமிக்க உருமாற்றங்கள் எதுவும் பரவில்லை என்றும் கூறியுள்ளது.* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 43 லட்சத்து 55 ஆயிரத்து 536.* கடந்த 24 மணி நேரத்தில் 526 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி 4 லட்சத்து 60 ஆயிரத்து 791.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 845 ஆக சரிந்துள்ளது. கடந்த 260 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்….

The post ஒன்றிய அரசு தகவல் 1 கோடி ஜைடஸ் கேடிலா தடுப்பூசிகள் வாங்க ஆர்டர்: இம்மாதமே செலுத்தப்படும் appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,Government ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை