சென்னை: தமிழ்நாடுபள்ளிக் கல்வி துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாணவர்கள் விடுமுறை நாளில் நீர்நிலைகளில் சென்று குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும். சைக்கிளில் வரும் மாணவ-மாணவியர் பாதுகாப்பாக வர வேண்டும் என எடுத்துரைக்க வேண்டும். தொடர் மழை பெய்யும் நேரத்தில் பள்ளியின் சுற்றுச் சுவரின் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சுவர் பழுதடைந்திருந்தால், அங்கு பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில், மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்றும், மின் கசிவு, இருக்கிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர்த் தொட்டி, ஆகியவை இருந்தால் அவற்றை மூட வேண்டும். மழைக் காலங்களில் நடந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பள்ளிகளில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். உயர் மின் அழுத்த கம்பங்கள் ஆபத்தான நிலையில் இருந்தால் அவற்றை அந்த துறையின் உதவியுடன் அகற்ற வேண்டும். பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரைகள் கைப்பிடிச் சுவர்கள், உள்ளிட்டவை பாதுகாப்பான நிலையில் இருக்கிறதா என்றும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் சுட வைத்த நீரை பருக அறிவுறுத்த வேண்டும்.
The post பருவமழைக்கு முன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.