×

அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களுக்கு கோயில்களில் பிரச்னை வந்தால் துறை ரீதியிலான நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி

சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், கோயில்களில் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை உடனடியாக துறையின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு பிரச்னைக்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கடந்த 2022-23ம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டு பயிற்சி முடித்த 4 மாணவர்களுக்கும் என மொத்தம் 98 மாணவர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2023-24ல் மேலும் 2 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானாவிற்கும் புதுச்சேரிக்கும் தான் ஆளுநர். தமிழ்நாட்டு பாஜவின் கொள்கை பரப்பு செயலாளர் இல்லை. தமிழிசை ஆளுநராக இருக்கும் மாநிலத்தில் உள்ள கோயில்களில் இது போன்ற முன்னெடுப்புகள் நடைபெற்றுள்ளதா என்பதை முதலில் பார்த்துவிட்டு பேச வேண்டும். கோயில் குடமுழுக்குகளில் முதலமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்க தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை.

சனாதனம், சமத்துவத்தைப் பற்றி திமுக தொடர்ந்து பேசும். சமத்துவம், சனாதனத்தை பற்றி பேச அனைத்து அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று கோயிலுக்கு சென்று பணியை செய்யும் அரச்சகர்களுக்கு கோயில்களில் எந்தவித பிரச்னையும் வந்தால் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இன்று பயிற்சி பெற்ற 94 பேரில் 90% பேர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

The post அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களுக்கு கோயில்களில் பிரச்னை வந்தால் துறை ரீதியிலான நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,CHENNAI ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...