×

தமிழ்நாடு முழுவதும் உள்ள 50,000 அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு அதிவேக இணையதள வசதி: 25,000 கி.மீ.க்கு பைபர் கேபிள் அமைக்க திட்டம்

தமிழகம் முழுவதும் 50,000 அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அதிவேக இணையதள வசதியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயல்படுத்தும் திட்டம் துவங்கி உள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசானது, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்த செலவில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான புதிய திட்டங்களை செயல்படுத்த துவங்கி உள்ளது. அதன்படி கடந்த 2023-24ம் நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாநிலம் முழுவதும் 20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பை வழங்க அரசு ரூ.184 கோடியை முதலீடு செய்கிறது.

இது முழுக்க முழுக்க அரசின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த உதவும். அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஐ.டி. பேஸ் டிஜிடெக் இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் உடன் ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,000க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிகள், காவல் நிலையங்கள், தபால் நிலையங்கள், அங்கன்வாடிகள், சுகாதார நிலையங்கள் மற்றும் ரேஷன் கடைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்கப்பட உள்ளது. இது, பாரத் நெட் திட்டத்தின் ஒருபகுதியான இ-கவர்னன்ஸ், இ-ஹெல்த் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும்.

மேலும் ஒன்றிய அரசின் யூனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் நிதியுதவியுடன் தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப துறையின் அதிகாரி கூறுகையில் : தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதாவது மாவட்டங்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் சில மாவட்டங்களில் உள்ளடங்கி திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சுமார் 50,000 இடங்களை இணைக்கும் வகையில் சுமார் 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைபர் அமைக்கப்படும். தமிழக அரசானது ஏற்கனவே இத்திட்டத்திற்கான முதலீடு செய்யப்பட்டதின் அடிப்படையில் பாரத்நெட் மூலம் 12,525 கிராமப்புற பஞ்சாயத்துகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் இணைய சேவை வழங்க உள்ளது. அதன்படி இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், தபால் நிலையங்கள், மற்றும் ரேசன் கடைகளை அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள 50,000 அரசு அலுவலகம், பள்ளிகளுக்கு அதிவேக இணையதள வசதி: 25,000 கி.மீ.க்கு பைபர் கேபிள் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Government Office and ,Tamil Nadu Information Technology Department ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...