×

கோவையில் சினிமா ஸ்டைலில் நடுரோட்டில் பயங்கரம் 2 வாலிபர்களை பட்டா கத்தியால் வெட்டி 6 ரவுடிகள் அட்டகாசம்: வீடியோ வைரல்

கோவை: கோவையில் சினிமா ஸ்டைலில் நடுரோட்டில் 2 வாலிபர்களை, 6 பேர் கும்பல் பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் ரஞ்சித் (25). இவர், பெண்கள் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று காலை நண்பர்கள் நித்திஷ் (24), கார்த்திக் (24) ஆகியோருடன் ஒரே பைக்கில் சென்றார். வழக்கில் ஆஜராகிவிட்டு மீண்டும் பைக்கில் புறப்பட்டு ரத்தினபுரி சென்று கொண்டிருந்தனர்.

டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் சென்றபோது 3 பைக்குகளில் 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் இவர்களை பின் தொடர்ந்தது. இதனால் ரஞ்சித் காட்டூர் வழியாக ராம்நகருக்குள் சென்றார். அங்குள்ள ராமர் கோயில் அருகே சென்று வளைவில் திரும்பியபோது பின்தொடர்ந்து வந்த 6 பேரும் அவர்களை மடக்கினர். நீண்ட பட்டா கத்தியால் ஒருவர் வெட்ட ஆரம்பித்தார். இதனால் ரஞ்சித்தும் நண்பர்களும் நடுரோட்டில் விழுந்தனர். உடனே 6 பேரும் ஒன்று சேர்ந்து அவர்களை மடக்கினர். கார்த்திக் இந்த கும்பலிடமிருந்து தப்பியோடினார். மற்ற 2 பேரும் சிக்கினர்.

அவர்களை ஓட ஓட விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டியது. அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியினர் திரண்டனர். உடனே கும்பல் பட்டா கத்திகளுடன் பைக்கில் தப்பி சென்றனர். கை, கால், இடுப்பு பகுதியில் வெட்டு காயத்துடன் 2 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபர்களை விரட்டி விரட்டி வெட்டிய காட்சி அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த கொடூர காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

The post கோவையில் சினிமா ஸ்டைலில் நடுரோட்டில் பயங்கரம் 2 வாலிபர்களை பட்டா கத்தியால் வெட்டி 6 ரவுடிகள் அட்டகாசம்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...