×

சென்னை நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம் விஷம் குடித்த அமமுக கவுன்சிலர் மருத்துவமனையில் திடீர் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

விழுப்புரம்: சென்னை நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் அமமுக கவுன்சிலரை மருத்துவமனையிலேயே போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது மாணவி. சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆண்டு வளவனூர் பேரூர் அமமுக நகர செயலாளரும், 11வது வார்டு கவுன்சிலருமான கந்தனின் (40) பாத்திரக்கடையில் அவர் பணிபுரிந்தார். அப்போது மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தவறாக பழகியுள்ளார்.

இதையறிந்த மாணவியின் பெற்றோர், மாணவியை சூளைமேட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து நர்சிங் படிக்க சேர்த்துள்ளனர். ஆனாலும் கந்தன், மாணவியுடன் தொடர்ந்து பழகியுள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி சூளைமேட்டில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த மாணவி, தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சென்னை சூளைமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடல் சொந்த ஊரான விளவனூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மாணவியின் உடலை சாலையில் வைத்து, மரணத்துக்கு காரணமான கந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த கந்தனின் உறவினர் விஜயன் என்பவர், கந்தன் தூண்டுதலின் பேரில் மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரது பெற்றோரிடம், கந்தன் மீது போலீசில் புகார் ஏதும் கொடுக்கக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கந்தன், விஜயன் ஆகிய 2 பேர் மீதும், மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தபோது கவுன்சிலர் கந்தன் அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உடல்நலம் தேறியதாக டாக்டர்கள் கூறிய நிலையில் நேற்று அதிகாலை வளவனூர் போலீசார், மருத்துவமனையிலேயே கந்தனை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post சென்னை நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம் விஷம் குடித்த அமமுக கவுன்சிலர் மருத்துவமனையில் திடீர் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,AAMUK ,Villupuram ,AMU ,
× RELATED யூனிட்டுக்கு கூடுதல் வசூல் முடிவை கைவிட டிடிவி.தினகரன் வலியுறுத்தல்