×

திருவேற்காட்டில் ரூ.2 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பு: 3 பேர் கைது

ஆவடி: திருவேற்காட்டில் கோயில் நிலம் என கூறி ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு, அர்ஜுனமேடு ராமதாஸ் சாலையை சேர்ந்தவர் ராஜப்பன் (64). இவர், கடந்த மாதம் 21ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்தார். அதில், எனக்கு சொந்தமாக திருவேற்காடு அன்பு நகரில் 63 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை பனையாத்தம்மன் கோயில் நிர்வாக தலைவர் ஆனந்தன் (75) போலி ஆவணம் தயார் செய்து, கோயில் இடம் என கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2 கோடி. அந்த நிலத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
செய்தேன். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருவாய்த்துறை நிலத்தை அளவீடு செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பித்தது.

கோயில் நிர்வாக தலைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பூந்தமல்லி வட்டாட்சியர் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்து சான்று அளித்தார். இருந்தபோதிலும் பனையாத்தம்மன் கோயில் நிர்வாக தலைவர் நிலத்தை காலி செய்யாமல் மிரட்டுகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த திருவேற்காடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராகேஷ் (23), திருவேற்காடு தம்புசாமி நகரை சேர்ந்த அருணகிரி (58), அம்பாள் நகரை சேர்ந்த நாராயணன் (64) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தலைமறைவாக உள்ள ஆனந்தனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post திருவேற்காட்டில் ரூ.2 கோடி மதிப்பு நிலம் ஆக்கிரமிப்பு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvedad ,Awadi ,Thiruvelludad ,Thiruvedad ,
× RELATED ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!!